புதுச்சேரியில் மேலும் ஓர் காங். எம்.எல்.ஏ. ராஜிநாமா
புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினர் லட்சுமி நாராயணன் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினர் பதவியை லட்சுமி நாராயணன் இன்று (பிப்.21) ராஜிநாமா செய்தார். இதனால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு அதிகரித்துள்ளது.
புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு பெரும்பான்மை இழந்துள்ளதால், பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்திருந்தது.
இதனையடுத்து முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு, பிப்ரவரி 22-ஆம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டிருந்தார்.
இதற்காக திங்கள்கிழமை சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், புதுச்சேரியில் ஏற்கனவே 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவி விலகிய நிலையில், மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை ராஜினாமா செய்துள்ளார்.
ராஜ்பவன் தொகுதி எம்எல்ஏவான க. லட்சுமி நாராயணன், சட்டப்பேரவைத் தலைவர் சிவக்கொழுந்துவிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
இதனால் காங்கிரஸ் உறுப்பினர்கள் 13-ஆக குறைந்துள்ளது. இதனால் பெரும்பான்மை நிரூபிப்பதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. தொடரும் நெருக்கடி நிலை புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.