கட்சியில் மரியாதை இல்லை என்பதால் ராஜிநாமா: காங். எம்.எல்.ஏ.
காங்கிரஸ் கட்சியில் மரியாதை இல்லை என்பதால் தனது சட்டப் பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக, லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் மரியாதை இல்லை என்பதால் தனது சட்டப் பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக, லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினர் பதவியை லட்சுமி நாராயணன் இன்று (பிப்.21) ராஜிநாமா செய்தார்.
அதற்கான கடிதத்தை சட்டப் பேரவை தலைவர் சிவக்கொழுந்துவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''நான் கட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. என்னால் ஆட்சி கவிழக்கூடாது என பொறுமையாக இருந்தேன். கட்சியில் எனக்கு போதிய மரியாதை இல்லை என்பதால் ராஜிநாமா செய்துள்ளேன்'' என்று கூறினார்.
சட்டப்பேரவை உறுப்பினர் லட்சுமி நாராயணன் ராஜிநாமா செய்ததால் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அரசுக்கு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு 13-ஆக குறைந்துள்ளது. எதிர்க்கட்சியின் பலம் 14-ஆக உள்ளது.
புதுச்சேரியில் சட்டப்பேரவையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் அடிப்படையில் 15 எம்.எல்.ஏ.க்கள் பலம் இருந்தால்தான் அறுதிப்பெரும்பான்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.