தமிழ்நாடு

நெல்லை மாவட்ட நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை: தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு

DIN

அம்பாசமுத்திரம்: மேற்குத் தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது. தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளனர்.

வங்கக்கடல் பரப்பில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பொழிவு இருப்பதையடுத்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

4 ஆண்டுகளுக்குப் பின் நெல்லை மாவட்டத்தின் பெரிய அணையான மணிமுத்தாறு அணை நிரம்பியதையடுத்து நேற்று முதல் அணையிலிருந்து உபரி நீர் திறந்துவிடப்படுகிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதையடுத்து இரண்டாவது நாளாக அணையிலிருந்து உபரி நீர் திறந்துவிடப்படுகிறது. 

காலை 7 மணி நிலவரப்படி, மணிமுத்தாறு அணையில் நீர்மட்டம் 117.50 அடியாக இருந்தது. அணைக்கு 1,500 கன அடி தண்ணீர் வரத்து இருந்தது. அணையிலிருந்து 500 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. பாபநாசம் அணையில் நீர்மட்டம் 142 அடியாகவும் அணையில் நீர்வரத்து 1,760 கனஅடியாகவும் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 2451 கன அடியாகவும் இருந்தது. சேர்வலாறு அணையில் நீர்மட்டம் 141.04 அடியாக உள்ளது. 

இதையடுத்து தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதையடுத்து காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

மணிமுத்தாறு அணையில் நீர்வரத்து அதிகரித்ததையடுத்து மேல்மட்ட பிரதான மதகுகளில் மூன்று மதகுகள் திறக்கப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்படுகிறது

தொடர்ந்து நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை பொழிவு இருப்பதால் அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிக்கும் நிலை உள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனாநதி அணையில் நீர்மட்டம் 83 அடியாகவும் அணைக்கு நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் 516 கன அடியாகவும் இருந்தது. ராமநதி அணையில் நீர்மட்டம் 81.75 அடியாகவும் அணைக்கு நீர்வரத்து 90 கன அடியாகவும் வெளியேற்றம் 30 கன அடியாகவும் இருந்தது.

கருப்பாநதியில் நீர்மட்டம் 66.93 அடியாகவும் அணையில் நீர்வரத்து 39 கன அடியாகவும் நீர்வெளியேற்றம் 25 கன அடியாகவும் இருந்தது. குண்டாறு அணையில் நீர்மட்டம் 36.10 அடியாகவும் நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் 4 அடியாகவும் இருந்தது. அடவிநயினார் கோயில் அணையில் நீர்மட்டம் 73.25 அடியாகவும் நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் 30 கன அடியாகவும் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT