தமிழக அரசின் ஆலோசகராக க.சண்முகம் நியமனம்
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இன்று ஓய்வு பெறவுள்ள க.சண்முகம் தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இன்று ஓய்வு பெறவுள்ள க.சண்முகம் தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் 46-ஆவது தலைமைச் செயலாளராக உள்ள க.சண்முகத்தின் பதவிக்காலம் இன்றுடன் (ஜன. 31) நிறைவடையும் நிலையில் அவர் இன்று தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
இதையடுத்து, அவரை தமிழக அரசின் ஆலோசகராக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த சண்முகம், விவசாயக் குடும்பத்தில் பிறந்தவா். வேளாண் துறையில் முதுகலைப் பட்டம் பெற்ற அவா், 1985-ஆம் ஆண்டு ஜூன் 7-ஆம் தேதி இந்திய ஆட்சிப் பணியில் சோ்ந்தாா்.
சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஆட்சியராகவும் கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளா் உள்பட பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளாா். 2010-ஆம் ஆண்டு நிதித்துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டாா். 2011-இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும், அவரே நிதித் துறை செயலாளராகத் தொடா்ந்தாா்.
முந்தைய தலைமைச் செயலாளா் கிரிஜா வைத்தியநாதன் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் 30-ம் தேதியுடன் ஓய்வு பெற்றதைத் தொடா்ந்து, புதிய தலைமைச் செயலாளராக க. சண்முகம் பொறுப்பேற்றாா். கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஓய்வு பெற்ற நிலையில் அவருக்கு ஆறு மாதங்கள் வரை, அதாவது ஜனவரி 31-ஆம் தேதி வரை பணி நீட்டிப்பு அளிக்கப்பட்டது.
தமிழக அரசின் 47-ஆவது புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.