முகப்பு
தமிழ்நாடு

சங்ககிரி அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: பள்ளி வளாகங்களில் தேவையற்ற களர் செடிகள் அகற்றம் 

சங்ககிரி அக்கமாபேட்டையில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பள்ளி வளாகங்களில் தேவையற்ற களர் செடிகள் அகற்றும் பணி நடைபெற்றது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
அக்கமாபேட்டையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டுள்ள பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள்.
பகிர்:

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டையில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் சேர்க்கையை அதிகரிக்கவும், விரைவில் பள்ளிகள் தொடங்கப்பட உள்ள நிலையில் மாணவ, மாணவிகள் நலனை கருத்திற்கொண்டு அக்கமாபேட்டை அமுதச்சுடர் அறக்கட்டளை இளைஞர்களும், சங்ககிரி பேரூராட்சி தூய்மை பணியாளர்களும் இணைந்து பள்ளி வளாகங்களை ஞாயிற்றுக்கிழமை தூய்மைப்படுத்தினர். 

சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டையில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியும், அரசு உயர்நிலைப்பள்ளியும் ஒரே வளாகத்தில் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் ஐவேலி ஊராட்சிக்குள்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

நிகழாண்டு கல்வித்துறையின் வழிகாட்டுதல்படி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. மேலும், பழைய மாணவர்களுக்கு நிகழாண்டு முதற்பருவத்திற்கான புத்தகங்கள், சத்துணவு உலர் பொருள்கள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கரோனா பொதுமுடக்கத்தையொட்டி பள்ளிகள் கடந்த சில மாதங்களாக பூட்டப்பட்டிருந்தன. அதில் தேவையற்ற களர் செடிகள் வளர்ந்து பள்ளி வகுப்பறையை மறைத்து வந்துள்ளன.

இதனையடுத்து அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் சேர்க்கையை நிகழாண்டு அதிகப்படுத்த எண்ணிய இளைஞர்கள் ஒன்றிணைந்து பேரூராட்சி நிர்வாகத்தை அணுகினர். அதனையடுத்து பேரூராட்சி செயலர், அலுவலர் எஸ்.பாலசுப்ரமணியம் தலைமையில்  பேரூராட்சி துப்பரவு ஆய்வாளர் லோகநாதன், துப்பரவு மேற்பார்வையாளர் அழகப்பன் மேற்பார்வையில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள், அக்கமாபேட்டை அமுதச்சுடர் அறக்கட்டளைத் தலைவர் சத்யபிரகாஸ், நவீன்,  நவீன்குமார், அஜித், மணிகண்டன் ஆகியோர் இணைந்து பள்ளி வளாகத்தில் வளர்ந்திருந்த தேவையற்ற களர் செடிகளை அகற்றி பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தினர். ஊர் பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கும், அறக்கட்டளை இளைஞர்களும் நன்றி தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.