ஓராசிரியர் பள்ளிகள் சார்பில் குளியலறையுடன் கூடிய சுகாதார வளாகம்
ஓராசிரியர் பள்ளிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனம் பங்களிப்பு நிதியில் கட்டப்பட்ட 15 குளியலறையுடன் கூடிய சுகாதார வளாகம் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருவள்ளூர்: சுவாமி விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கம் சார்பில் செயல்படும் ஓராசிரியர் பள்ளிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனம் பங்களிப்பு நிதியில் கட்டப்பட்ட 15 குளியலறையுடன் கூடிய சுகாதார வளாகம் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருவள்ளூர் அருகே உளுந்தை கிராமத்தில் சுவாமி விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தின் சார்பில் செயல்படும் ஓராசிரியர் பள்ளிகள், ஸ்ரீராம் குழுமத்தின் நிதி உதவியுடன் இருளர் குடும்பத்தினருக்கு குளியலறையுடன் கூடிய சுகாதார வளாகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்பேரில் ஓராசிரியர் பள்ளிகளின் கெüரவச் செயலாளர் கிருஷ்ணமாச்சாரி, தலைவர் கிருஷ்ணமூர்த்தி, துணைத்தலைவர் அகிலா சீனவாசன் ஆகியோர் வழிகாட்டுதல்படி பூண்டி அருகே கன்னிக்குளத்தில் தலா 1 லட்சம் மதிப்பீட்டில் 15 குடும்பங்களுக்கு குளியலறையுடன் கூடிய சுகாதார வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதை பயனாளிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஓராசிரியர் பள்ளிகளின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார், ஆய்வு ஒருங்கிணைப்பாளர் சிவராம கிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின் பொறுப்பாளர் வைத்தியநாதன் ஆகியோர் பங்கேற்று குளியலறையுடன் கூடிய சுகாதார வளாகத்தை இருளர் குடும்பங்களைச் சேர்ந்த பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.