பெட்ரோல், டீசல் விலை உயர்வு: வேதாரண்யத்தில் காங்கிரஸார் நூதனப் போராட்டம்
வேதாரண்யத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து அமரர் ரத ஊர்தியில் மோட்டார் வாகனம், எரிவாயு உருளையை ஏற்றி யாத்திரை மேற்கொண்ட காங்கிரஸார் இன்று நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து அமரர் ரத ஊர்தியில் மோட்டார் வாகனம், எரிவாயு உருளையை ஏற்றி யாத்திரை மேற்கொண்ட காங்கிரஸார் இன்று (ஜூலை 8 ) நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு மகளிர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸார் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
இறந்தவரின் சடலத்தை இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லும் அமரர் ரத ஊர்தியில் மோட்டார் சைக்கிள் மற்றும் எரிவாயு உருளையை ஏற்றி மாலை அணிவிக்கப்பட்டிருந்தது.
ரதத்தை தள்ளிக் கொண்டு யாத்திரையாக சென்ற காங்கிரஸார் மோடிக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். பின்னர், அம்பேத்கர் சிலை எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, ரதத்தைச் சுற்றி வந்த மகளிர், ஒப்பாரி பாடி பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏற்படும் வேதனையை வெளிப்படுத்தினர்.
மக்களவை முன்னாள் உறுப்பினரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான பி.வி.இராசேந்திரன் தலைமை வகித்துப் பேசினார்.
மகளிர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சத்தியகலா செந்தில், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் எம்.எம்.ஆப்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.