வேதாரண்யம்: மிளகாய்ப் பொடி தூவி பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே வீட்டுக்கு வெளியே குளித்த பெண் மீது மிளகாய்ப் பொடி தூவி தங்கச் சங்கிலியைப் பறித்து சென்ற சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை
வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே வீட்டுக்கு வெளியே குளித்த பெண் மீது மிளகாய்ப் பொடி தூவி தங்கச் சங்கிலியைப் பறித்து சென்ற சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தகட்டூர், ராமகோவிந்தன்காடு பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் விவசாயி. இவரது மனைவி சூரியகாந்தி (58).
இவர், நேற்று இரவு (மே-31) 9 மணிக்கு வீட்டுக்கு வெளியே உள்ள இடத்தில் குளித்துள்ளார்.
பின்னர், துவைத்த ஆடைகளை உலர்த் திறந்த வெளியில் கட்டப்பட்டுள்ள கொடியில் போட்டுக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது, அருகேயுள்ள வைக்கோல் போரின் பின்பக்கம் மறைந்திருந்த மர்ம நபர், பெண்ணின் கண்ணில் மிளகாய்ப் பொடியை வீசி, கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடியுள்ளார்.
பெண்ணின் கூச்சல் கேட்டு ஓடி வந்த குடும்பத்தார், அக்கம் பக்கத்தார் தேடியும் மர்ம நபர் தலைமறைவாகி விட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த வாய்மேடு காவல் துறையினர் நிகழ்விடத்தில் விசாரித்து வருகின்றனர்.