சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 214 வழக்குகள் பதிவு
நேற்று கரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியது தொடர்பாக 214 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 231 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு அறிவித்துள்ள சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு காலத்தில் நேற்று கரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியது தொடர்பாக 214 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 231 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
முகக்கவசம் அணியாத 964 நபர்கள் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காத 15 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு, தமிழக அரசால் 10.5.2021 முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வந்த நிலையில், தமிழக அரசு 21.6.2021 காலை முதல் 5.7.2021 காலை வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது. அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், முறையான தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு பணிகளை தீவிரபடுத்த பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதன்பேரில், சென்னை பெருநகரில் உள்ள 12 காவல் மாவட்ட எல்லைகளில் 13 எல்லை வாகன தணிக்கை சாவடிகள் மற்றும் அனைத்து காவல் நிலைய எல்லைகள் செக்டார்களாக வகைப்படுத்தி உரிய சாலை தடுப்புகள் மற்றும் வாகனத் தணிக்கைச் சாவடிகள் அமைத்து கண்காணித்து, இ-பதிவு வைத்திராத பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் குழுவினர் நேற்று மேற்கொண்ட வாகனத் தணிக்கை மற்றும் ரோந்து கண்காணிப்பு சோதனையில், சென்னை பெருநகரில் கொரோனா ஊரடங்கு தடையை மீறியது தொடர்பாக 214 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றியது தொடர்பாக 207 இருசக்கர வாகனங்கள் மற்றும் 24 ஆட்டோக்கள் என மொத்தம் 231 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், முகக்கவசம் அணியாமல் சென்றது தொடர்பாக 964 வழக்குகளும், சமூக இடைவெளி கடைபிடிக்காதது தொடர்பாக 15 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தமிழக அரசின் ஊரடங்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து கரோனா தொற்றை தடுக்க சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.