தேர்தல் அதிகாரிகள் இடமாற்றம்: தடை கோரி திமுக மனு
தேர்தல் அதிகாரிகளாகவும், உதவி தேர்தல் அதிகாரிகளாகவும் நியமிக்கப்பட்டவர்களை, தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசிக்காமல் இடமாற்றம் செய்ததற்கு தடை கோரி திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட
தேர்தல் அதிகாரிகளாகவும், உதவி தேர்தல் அதிகாரிகளாகவும் நியமிக்கப்பட்டவர்களை, தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசிக்காமல் இடமாற்றம் செய்ததற்கு தடை கோரி திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவில், தேர்தல் ஆணையம், கடந்த ஜனவரி 21-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவதற்காக, மாவட்ட தேர்தல் அதிகாரி, தொகுதி தேர்தல் அதிகாரி மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகளை நியமித்து உத்தரவு பிறப்பித்திருந்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் அந்த அறிவிப்பில் தேர்தல் அதிகாரிகள், உதவி தேர்தல் அதிகாரிகளின் முகவரி, செல்லிடப்பேசி எண், கட்செவி எண், மின்னஞ்சல் முகவரி என்பது உள்ளிட்ட தொடர்பு விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. இதுதொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு மனு அனுப்பினேன். இந்த மனுவுக்கு பதிலளித்த தலைமைத் தேர்தல் அதிகாரி, பொதுத்துறை இணையதளத்தில், 234 தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகள், உதவி தேர்தல் அதிகாரிகளின் தொடர்பு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்ததார்.
ஆனால், அந்த பட்டியலில் இடம் பெற்றிருந்த தேர்தல் அதிகாரிகள், தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசிக்காமல், உள்நோக்கத்துடன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களை இடமாற்றம் செய்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை பிறப்பித்த அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும்.அந்த அறிவிப்பை ரத்து செய்து, குறைகளை களைந்து புதிய அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது
தேர்தல் ஆணையம் தரப்பில், தற்போது புதிய பட்டியல் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. 3 ஆண்டுகளுக்கு மேல் பதவி வகித்தவர்கள் பணிமாற்றம் செய்யப்படுவது உண்டு. அந்த வகையில் இவர்கள் பணிமாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, புதிய பட்டியலை சரிபார்க்க மனுதாரருக்கு அவகாசம் வழங்கிய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.