முகப்பு
தமிழ்நாடு

ஆதார் அட்டை அடிப்படையில் புதிய வாக்காளர் பட்டியல்: உயர்நீதிமன்றம் மறுப்பு

ஆதார் அட்டையில் இடம் பெற்றுள்ள விவரங்களின் அடிப்படையில் புதிய வாக்காளர் பட்டியலைத் தயாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
ஆதார் அட்டை அடிப்படையில்புதிய வாக்காளர் பட்டியல்
பகிர்:

ஆதார் அட்டையில் இடம் பெற்றுள்ள விவரங்களின் அடிப்படையில் புதிய வாக்காளர் பட்டியலைத் தயாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் சேலத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் சத்தியமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனுவில், குடிமக்களின் அடையாளத்துக்காக  பயோமெட்ரிக் ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வாக்காளர்களை அடையாளம் காண வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டிய அவசியம் என்ன?

வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் என்பது முறையாக நடைபெறவில்லை. தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடர்பான முகாம்கள் குறித்துத் தேர்தல் ஆணையம் முறையாக விளம்பரங்கள் வெளியிடுவது இல்லை. ஆளுங்கட்சியைச் சாராத தகுதியான வாக்காளர்களை பட்டியலிலிருந்து நீக்குவதற்காகவே வாக்காளர் பட்டியல் திருத்தம் முகாம் நடத்தப்படுகிறது. லட்சக்கணக்கான வாக்காளர்கள் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கவில்லை. வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி என்ற பெயரில் மக்களின் பணம் வீணடிக்கப்படுகிறது.

பயோமெட்ரிக் அடையாள அட்டை என்னும் அறிவியல்பூர்வமான நடைமுறை உள்ள நிலையில் பழைய நடைமுறையான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தேவையற்றது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஆதார் அட்டையில் இடம் பெற்றுள்ள விவரங்களின் அடிப்படையில் புதிய வாக்காளர் பட்டியலைத் தயாரிக்க உத்தரவிட வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற வேண்டும் என நிர்ப்பந்திக்காமல் பயோமெட்ரிக் அடையாள அட்டை வைத்திருப்பவர்களை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி,  நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டு, தேர்தல் நடைமுறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் மனுவில் எழுப்பியுள்ள கோரிக்கைகள், தற்போதைய நிலையில் தொடர்பில்லாதவை எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர். அதேநேரம், அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன் இதுபோன்ற கோரிக்கையுடன் மனுதாரர் நீதிமன்றத்தை அணுகலாம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →