முகப்பு
தமிழ்நாடு

முழு உண்மையை நேருக்கு நேர் சந்தித்து தீர்வை சிந்திப்போம்: முதல்வர் ஸ்டாலின்

முழு உண்மையை நாம் நேருக்கு நேர் சந்தித்து தீர்வு குறித்து சிந்திப்போம் என்று மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

சென்னை: முழு உண்மையை நாம் நேருக்கு நேர் சந்தித்து தீர்வு குறித்து சிந்திப்போம் என்று மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

தமிழகத்தில் கரோனா பெருந்தொற்று தீவிரமாகி வரும் நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு, காணொலி காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், தமிழகத்தில் அடுத்த 2 வாரங்களில் கரோனா பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. நோய் தொற்றின் அளவு மேலும் உயரும் போது படுக்கை வசதிகள், ஆக்ஸிஜன் வசதியின் தேவையும் அதிகரிக்கும்.

கரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள மருத்துவத் துறை, காவல்துறை, வருவாய் துறை உள்ளிட்டவை ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள், கண்காணிப்பு அதிகாரிகள் முழு வீச்சுடன் செயலாற்ற வேண்டும். தமிழக மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.

தகுதியான அனைவரும் தாமாக முன் வந்து கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், கரோனா தொற்றுக்கு உயிரிழக்கும் அபாயம் அதிகரித்துள்ளது. சென்னை, நெல்லை, கோவை, மதுரை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கரோனா தொற்று கடுமையாக உள்ளது.

தேவையான அளவுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களை கூடுதலாக நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் உள்ளதை உள்ளபடி முன்வைத்து பிரச்னைகளை சந்தித்து, நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முழு உண்மையை நாம் நேருக்கு நேர் சந்தித்து தீர்வு குறித்து சிந்திப்போம் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →