வைத்தீஸ்வரன்கோயில்: பொது மக்கள் விரும்பி கடைப்பிடிக்கும் பொது முடக்கமாக மாற்ற பேரூராட்சி செயல் அலுவர் நடவடிக்கை
பொதுமுடக்கத்தைத் தொடர்ந்து அதனை மக்கள் வீட்டிலேயே பயனுள்ளதாக மாற்றிட மயிலாடுத்துறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி செயல் அலுவலர் கு.குகன் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
சீர்காழி: கரோனா இரண்டாம் அலை பரவுதலை கட்டுப் படுத்தும் நோக்கில் தமிழக அரசால் மே 10-ஆம் தேதி முதல் 24 -ஆம் தேதி வரை பொதுமுடக்கம் அறிவிக்கப் பட்டுள்ளதைத் தொடர்ந்து அதனை மக்கள் வீட்டிலேயே பயனுள்ளதாக மாற்றிட மயிலாடுத்துறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி செயல் அலுவலர் கு.குகன் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
பொதுமுடக்க தண்டோரா அறிவிப்பு: ஊரடங்கு காலத்தில் அவசிய தேவையின்றி எவரும் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியின் 15 வார்டுகளிலும் வாகனத்தில் தண்டோரா அறிவிப்பு செய்யப்பட்டது.
நிரந்தர அறிவிப்பு ஒலி பெருக்கி அமைப்பு: வைத்தீஸ்வரன் கோயில் காவல்துறை மூலம் பொதுமக்கள் வணிகர்களுக்கு அவ்வப்போது விழிப்புணர்வு அறிவிப்புகள் வெளியிட நிரந்தர ஒலி பெருக்கி அமைப்பு கடைத்தெருவில் முக்கிய பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
வீடற்ற மக்களுக்கு தொண்டு நிறுவனங்கள் மூலம்உணவு வழங்க ஏற்பாடு: சாலை ஓரம் கடைத்தெருவில் மற்றும் பேருந்து நிலையத்தில் வசிக்கும் வீடற்ற நபர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் பங்களிப்புடன் பேரூராட்சி மூலம் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வீடு வீடாக கபசுர குடிநீர்: வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி மூலம் வீடு வீடாக கப சுர குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தன்னார்வலர்களும், தொண்டு நிறுவனங்களும் இணைந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் வெளியில் வருவதை தடுக்க ஆன்லைன் போட்டிகள்: குழந்தைகளையும் விட்டு வைக்காமல் கொரோனா தாக்குவதால் ஊரடங்கின் போது குழந்தைகள் வீட்டை விட்டு வெளியில் வருவதை தடுக்கவும், அதே நேரத்தில் குழந்தைகள் மனதில் நிலவும் மன அச்சத்தை போக்கும் விதமாகவும் ஆன் லைன் போட்டிகள் நடத்தப் படும் என அறிவித்துள்ளார்.
நோய் எதிர்ப்பு தரும் சத்தான உணவுகளை சமைக்க இல்லத்தரசிகளுக்கு ஆன் லைன் போட்டிகள்:
நோய் வரும் முன் காப்பதிலும் வந்த பின் குணமடைவதிலும் தனி நபர் நோய் எதிர்ப்பு சக்தி முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே நோய் எதிர்ப்பு சக்தி தரும் சத்தான எளிய பாரம்பரிய உணவுகளை சமைக்க இல்லத்தரசிகளுக்கு ஆன் லைன் போட்டிகள் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.
விதிகளை கடைபிடிக்கும் வணிகர்களுக்கு பரிசு: அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்ய அனுமதிக்கப் பட்டுள்ள மருந்து, பால் , மளிகை , காய்கறி விற்பனை போன்ற கடைகளில் சரியான நேரத்திற்கு திறந்து மூடுதல், சமூக இடைவெளி கடை பிடித்தல், கை கழுவும் அமைப்பு நிறுவுதல் , கட்டாயம் மாஸ்க் அணிதல் போன்ற விதிமுறைகளை கடைபிடிக்கும் வணிகர்களுக்கு பரிசு அளிக்கப் படும் என தெரிவித்துள்ளார்.
கரோனா தடுப்பூசி முகாம் வீடு வீடாக விழிப்புணர்வு: கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயங்கும் பொது மக்கள் நலன் கருதி வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி முன் பதிவு செய்து வைத்தீஸ்வரன் கோயிலில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப் படுவதாக தெரிவித்தார்.
பெண்கள் குழந்தைகளுக்கு ஆன் லைன் உளவியல் கவுன்சலிங்: பெண்கள், குழந்தைகள் மனதில் கொரோனா தொற்று குறித்த அச்சம் , மன அழுத்தம் போக்கி விழிப்புடன் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கைகளை பின் பற்ற உளவியல் நிபுணர்கள் மூலம் ஆன்லைன் கவுன்சலிங் நடத்தப்பட உள்ளதாக செயல் அலுவலர் கு.குகன் தெரிவித்தார்.