கரோனா: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு
குன்னத்தூர் அருகே கரோனா பாதிப்பால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குன்னத்தூர் அருகே கரோனா பாதிப்பால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் குன்னத்தூர் அருகே வெள்ளரவெளி பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ் மகன் தெய்வராஜ்(42). இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக கோவையில் உள்ள உறவினர் வீட்டு இறப்பிற்குச் சென்று வந்துள்ளார்.
இதையடுத்து இவர் கரோனா பாதிப்பிற்குள்ளாகி, ஈரோடு மாவட்டம் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 9ஆம் தேதி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து இவரது மனைவி சாந்தி(35) கரோனா பாதிப்பிற்குள்ளாகி ஈரோடு மாவட்டம் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
இதேபோல பாதிப்பிற்குள்ளான தெய்வராஜின் மூத்த சகோதரர் ராஜா(50) ஊத்துக்குளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார். மேலும் தெய்வராஜின் இளைய சகோதரர் சௌந்தர்ராஜன் (45)திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கரோனா பாதிப்பால் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.