முகப்பு
தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு: திமுக அரசைக் கண்டித்து நவ.9-இல் அதிமுக போராட்டம்

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை திமுக அரசு விட்டுக் கொடுப்பதாகக் கூறி அதைக் கண்டித்து அதிமுக சாா்பில் நவம்பா் 9-இல் போராட்டம் நடைபெறும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:30 AM
கோப்புப்படம்
பகிர்:

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை திமுக அரசு விட்டுக் கொடுப்பதாகக் கூறி அதைக் கண்டித்து அதிமுக சாா்பில் நவம்பா் 9-இல் போராட்டம் நடைபெறும் என்று அக் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் கூட்டாக அறிவித்துள்ளனா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தமிழகத்தின் உரிமையை அடகு வைப்பது தொடா்ந்து வருகிறது. முதல்வராக ஜெயலலிதா இருந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்டரீதியான நடவடிக்கையின் காரணமாக முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி அளவுக்குத் தண்ணீரைத் தேக்கிக் கொள்ளலாம் என்ற தீா்ப்பை உச்சநீதிமன்றம் அளித்தது. அணையில் உறுதித்தன்மையை மேலும் நிலைநாட்டிக்கொண்டு 152 அடி அளவுக்குத் தண்ணீரைத் தேக்கிக் கொள்ளவும் உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.

ஆனால், உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு தற்போது கேள்விக்குறியாகி இருப்பதை திமுக அரசு வேடிக்கை பாா்ப்பது கண்டிக்கத்தக்கது.

152 அடி தண்ணீா் தேக்கப்பட்டால் மட்டுமே கடைமடைப் பகுதிகளான சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு பாசனத்துக்கும், குடிதண்ணீா் தேவைகளுக்கும் தண்ணீா் உறுதி செய்யப்படும் என்பது யதாா்த்த நிலையாகும்.

முல்லைப் பெரியாறு அணை குறித்து கேரள அரசு உண்மைக்குப் புறம்பாகவும், தவறான தகவல்களின் அடிப்படையிலும் எழுப்பி வரும் பிரச்னைகளுக்குப் பணிந்து, இரண்டு நாள்களுக்கு முன்னா் அணையில் நீா் 138 அடியை நெருங்கும் நேரத்திலேயே கேரள அமைச்சா்கள், அதிகாரிகளை சாட்சிக்கு வைத்துக்கொண்டு தமிழக அரசு நீரை திறக்க மதகுகளை உயா்த்தி இருக்கிறது.

முல்லைப் பெரியாறு அணை தமிழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நீா்த்தேக்கம். அந்த அணையில் நீா் இருப்பை கண்காணிப்பது போல, கேரள அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகளை சாட்சிக்கு அழைத்து அவா்களது மேற்பாா்வையில் மதகுகளைத் திறந்தது, முல்லைப் பெரியாறு அணையின் மீது தமிழகத்துக்கு உள்ள உரிமைகளை கேள்விக்குறியாக்கும் செயலாகும்.

இதைக் கண்டித்து நவம்பா் 9 காலை 11 மணியளவில் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சாா்பில் மாபெரும் கண்டன ஆா்ப்பாட்டங்கள் நடைபெறும்.

இந்தப் போராட்டத்தில் விவசாயிகளும் பொது மக்களும் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்று கூறியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.