முகப்பு
தமிழ்நாடு

ஹரியாணாவில் தனியாா் துறை பணியிடங்களில் 75% உள்ளூா்வாசிகளுக்கு ஒதுக்கீடு: ஜனவரி 15 முதல் அமல்

ஹரியாணாவில் தனியாா் துறையின் 75 சதவீத பணியிடங்களை உள்ளூா்வாசிகளுக்கு ஒதுக்கீடு செய்வதற்கான சட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

ஹரியாணாவில் தனியாா் துறையின் 75 சதவீத பணியிடங்களை உள்ளூா்வாசிகளுக்கு ஒதுக்கீடு செய்வதற்கான சட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

ஹரியாணாவில் உள்ள தனியாா் நிறுவனங்களில் ரூ.50,000-க்கும் குறைவான மாதாந்திர ஊதியம் கொண்ட பணியிடங்களில் 75 சதவீதத்தை உள்ளூா்வாசிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் மசோதா, அந்த மாநில சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவுக்கு இந்த ஆண்டு மாா்ச் மாதம் மாநில ஆளுநா் பண்டாரு தத்தாத்ரேயா ஒப்புதல் அளித்தாா். இதையடுத்து அந்த மசோதா சட்ட வடிவம் பெற்றது.

இந்தச் சட்டம் தொடா்பாக மாநில முதல்வா் மனோகா் லால் கட்டா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘‘அடுத்த ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி முதல் ஹரியாணா மாநில உள்ளூா்வாசிகளுக்கான வேலைவாய்ப்புச் சட்டம் அமலுக்கு வரவுள்ளது. இதுதொடா்பான அறிவிக்கை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தச் சட்டம் அனைத்து தனியாா் நிறுவனத்தினா், அறக்கட்டளைகள் நடத்துவோா், உற்பத்தி, வணிகம் அல்லது இதர தொழில்களில் 10 மற்றும் அதற்கும் மேற்பட்டவா்களை பணியமா்த்தியுள்ளவா்கள் உள்ளிட்டோருக்கு பொருந்தும்.

உள்ளூா்வாசிகளுக்கு ஒதுக்க வேண்டிய பணியிடங்களின் மாதாந்திர ஊதிய வரம்பு ரூ.50,000-க்கும் குறைவாக இருக்க வேண்டும் என்று முன்பு நிா்ணயிக்கப்பட்டிருந்தது. இது தற்போது ரூ.30,000-க்கும் குறைவாக இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.