முகப்பு
தமிழ்நாடு

கூத்தாநல்லூர்: சாலைகளில் கால்நடைகள் திரிந்தால், பிடிக்கப்பட்டு ரூ.1,000 அபராதம்

கூத்தாநல்லூர் நகரத்திற்குள் மாடுகள் சுற்றித் திரிந்தால் அடைக்கப்பட்டு, ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும் என ஆணையர் ராஜகோபால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:35 AM
கூத்தாநல்லூர் நகராட்சி எதிரே திரண்டிருக்கும் கால்நடைகள்.
பகிர்:

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகரத்திற்குள் மாடுகள் சுற்றித் திரிந்தால் அடைக்கப்பட்டு, ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும் என ஆணையர் ராஜகோபால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கால்நடைகள் வளர்ப்பதன் முக்கிய நோக்கமே வருமானம் ஈட்டுவதற்காகத்தான். இந்நிலையில் அரசும், கிராமப்புறப் பெண்களுக்கு ஆடு, கோழி மற்றும் மாடுகளை வழங்கி அவர்களின் வாழ்வாதாரம் உயர வழி வகுக்கிறது. முந்தைய காலங்களில் வயல்களில் நல்ல விளைச்சல் இருந்தது. அதனால், வைக்கோல் தட்டுப்பாடின்றி கிடைத்தது. நீர் நிலைகளில் தண்ணீர் குறைவின்றி ஓடியதால், பச்சைப் பசேலன புற்கள் முளைத்தன. அதனால், தேவையான அளவுக்கு மாடுகளுக்கு இரை கிடைத்து வந்தது.

ஆனால், தற்போதைய காலகட்டத்தில் ஆறுகளில் போதிய அளவு தண்ணீர் வரத்து இல்லாததால், கால்நடைகளுக்குத் தேவையான உணவு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும், நகர்ப்புறங்களில் கால்நடை வளர்ப்போர் தங்களது கால்நடைகளை பெரும்பாலும் ஓரிடத்தில் கட்டி வைப்பதே கிடையாது. இதனால், கால்நடைகள் உணவுக்காக சுற்றித் திரிகின்றன.

நகர்ப்புறங்களில் உணவகங்கள், காய்கறிக் கடைகள் உள்ளிட்ட இடங்களைச் சுற்றி கால்நடைகள் திரிகின்றன. உணவகங்களில் இருந்து வெளியே கொட்டப்படும் கழிவுகள் மற்றும் காய்கறிக் கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை உண்பதற்காக அவைகள் சுற்றிச் சுற்றி வருவதுண்டு. அதேபோல் குப்பைத் தொட்டிகளில் போடப்படும் கழிவுகளை உண்பதற்காகவும் கால்நடைகள் சுற்றி வரும். இவ்வாறு திரியும் கால்நடைகள் பெரும்பாலும் சாலைகளை ஆக்கிரமித்து விடுகின்றன.

பகல், இரவு நேரங்களில் சாலைகளிலும், சாலையோரங்களிலும் படுத்திருக்கும் கால்நடைகளின் மீது வாகனங்கள் மோதி அவை இறந்து போகும் நிகழ்வுகளும் ஏற்படுவதுண்டு. அதேபோல், இரவு நேரங்களில் இருச்சக்கர வாகனங்களில் செல்வோர், சாலைகளில் கால்நடைகள் படுத்திருப்பது தெரியாமல், அவற்றின் மீது மோதி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இது போன்ற சம்பவங்களால் பெரிய அளவிலான காயம் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

திருவாரூர் - மன்னார்குடி பிரதான சாலையான, லெட்சுமாங்குடி சாலையில் இரவு, பகல் என எந்த நேரத்திலும் மாடுகள் சுற்றித் திரிகின்றன. சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்தக்கோரி பொதுமக்கள் தரப்பில் பலமுறை வலியுறுத்தப்பட்டும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆணையர் ராஜகோபால் கூறியது: கூத்தாநல்லூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலும், ஏராளமான மாடுகள் உள்ளன. பல மாடுகள் சாலையில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறது. மாட்டின் உரிமையாளர்களிடம் பலமுறை தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அலட்சியமாக இருக்கின்றனர்.

நகராட்சி எல்லைக்குள் ஆடு, மாடு வளர்ப்பவர்கள், தங்களின் வீடுகளிலேயே கால்நடைகளைக் கட்டிப் போட்டு வளர்க்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும், கால்நடைகளை சாலையில் திரியவிடக் கூடாது. மீறி சாலையில் திரிய விட்டால், கால்நடைகளைப் பிடித்து, அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் அடைக்கப்படும். மேலும், மாட்டின் உரிமையாளர்களிடம், ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். மாட்டின் உரிமையாளர்கள் அலட்சியப்படுத்தாமல், எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.