தமிழ்நாடு

இந்தியாவை உலக நாடுகளில் முதன்மை நாடாக்க சபதம் எடுப்போம்: ஸ்டாலின் 

DIN

”இந்தியாவை உலக நாடுகளில் முதன்மை நாடாக்கிடச் சபதம் எடுப்போம்” என்று இந்திய அரசமைப்புச் சட்ட நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.


இந்திய அரசமைப்புச்சட்டத்தை நாம் ஏற்றுக் கொண்ட நாளை (26.11.2021) முன்னிட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 1949-ஆம் ஆண்டு இதே நாளில் நம்மால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசமைப்புச் சட்டம் நம் உரிமைகளையும், கடமைகளையும் உள்ளடக்கியிருப்பதோடு மட்டுமின்றி - நம் ஜனநாயகத்தின் அனைத்துக் கட்டமைப்புகளையும் கட்டிக் காத்து வருகிறது.

இறையாண்மை, சமத்துவம், மதச்சார்பின்மை, ஜனநாயகம் ஆகியவற்றை தன்னகத்தே கொண்டுள்ள இந்தியக் குடியரசின் அரசமைப்புச் சட்டத்தில் சமூகநீதி, கருத்து சுதந்திரம், சகோதரத்துவம் உள்ளிட்ட அனைத்தும் பக்கத்துக்குப் பக்கம் மிளிருகிறது. உரிமைகள் அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி போல் வந்து கொண்டிருக்கிறது.

எத்தனையோ அரசமைப்புச் சட்டங்கள் உலகளவில் இருந்தாலும் - எழுத்துப்பூர்வமான நம் சட்டம்- உலகப் புகழ் பெற்றது! அப்படியொரு அரசமைப்புச் சட்டத்தைத் தந்த அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு நாம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டவர்கள். இந்தியக் குடிமக்கள் அனைவரும் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இச்சட்டத்தை உருவாக்கப்பாடுபட்டதையும் - தேடிக் கண்டுபிடித்துக் கொண்டு வந்து நிறைவேற்றித் தந்துள்ள ஒன்றிய- மாநில அரசு உறவுகள், அதிகாரங்கள், நீதித்துறை சுதந்திரம், சட்டமன்ற, நாடாளுமன்றங்களின் இறையாண்மை, குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவரின் செயல்பாடுகள் என்பதோடு – அனைத்திற்கும் முத்தாய்ப்பான “அடிப்படை உரிமைகள்”, “அரசு கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள்” “அடிப்படைக் கடமைகள்”அனைத்தும் நமக்கு அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தந்தவை. இன்றளவும் இந்தியாவைக் கட்டி ஆளும் இந்த அரசமைப்புச் சட்டம்தான், மாநிலத்தில் அன்னைத் தமிழுக்கு ஆட்சிமொழி உரிமையும்  அளித்திருக்கிறது. எமக்கு அளித்துள்ள எண்ணிலடங்கா உரிமைகளை நினைத்துப் பார்த்து- எத்தகையை சூழலிலும் அரசமைப்புச் சட்டம் விரும்பிய ஜனநாயகத்தைக் காப்பாற்றிட நாம் அனைவரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டிய தருணமே இந்த அரசமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாளாகும்.

சிறப்பு வாய்ந்த இந்த அரசமைப்புச் சட்டத்தின் திறவுகோல்தான் முகவுரை என்றழைக்கப்படும் “preamble” (முன்னுரை) என்பதை அரசியல் சட்ட நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள். அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களில் ஒன்று என்று உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட இந்த முகவுரையை குடிமக்கள் மட்டுமல்ல - ஆட்சியில் இருப்போரும் புடம் போட்ட தங்கம் போல் போற்றிப் பாதுகாக்க வேண்டிய கருவூலமாகப் பார்க்க வேண்டும். அந்த முகவுரை அடங்கிய அரசமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதுதான் நவம்பர் 26-ஆம் தேதி. நம் அரசியல் சட்டம் கண்ட இந்தியாவை உலக நாடுகளில் முதன்மை நாடாக்கிடச் சபதம் எடுப்போம்.

இது நம் அரசமைப்புச் சட்டம். அதனை வெளிப்படுத்தவே - அரசியல் சட்டத்தின் முதல் வரியே நாங்கள் இந்திய மக்கள் (“We the people of India”) என்ற முழக்கத்தை முன் வைக்கிறது. மக்கள் அனைவருக்கும் அரசமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட தின நல்வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT