காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்: இளைஞருக்கு 12 ஆண்டுகள் சிறை
வாகனத் தணிக்கையின்போது காவல் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
புதுக்கோட்டை: வாகனத் தணிக்கையின்போது காவல் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி மகன் அய்யப்பன் (25). இவர் கடந்த 2019ஆம் ஆண்டு அக். 5ஆம் தேதி இரவு 11.45 மணிக்கு கறம்பக்குடி சீனிக்கடை முக்கம் பகுதியில் காவலர்கள் வாகனத் தணிக்கையில் இருந்தபோது இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
வாகனத் தணிக்கை செய்து கொண்டிருந்த சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் கணேசன் என்பவரை, தரக்குறைவாகப் பேசியும், பீர் பாட்டிலை உடைத்து குத்திக் கொன்றுவிடுவேன் என்று அய்யப்பன் மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது.
Advertisement
இதையடுத்து அவர் அளித்த புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அய்யப்பனைக் கைது செய்தனர்.
இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல்காதர், குற்றவாளி அய்யப்பனுக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 60 ஆயிரம் அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீர்ப்பளித்தார்.