முகப்பு
தமிழ்நாடு

காஞ்சிபுரத்தில் தொடர்மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை காலையிலிருந்து நாள் முழுவதும் தொடர்ந்து பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:18 AM
காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் கொட்டும் மழையில் ஆபத்தான முறையில் குடை பிடித்துக் கொண்டே இருசக்கர வாகனத்தில் செல்லும் இளைஞர்.
பகிர்:


காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை காலையிலிருந்து நாள் முழுவதும் தொடர்ந்து பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்தது.

காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலையிலிருந்து நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதிகாலையில் லேசாக பெய்யத் தொடங்கிய மழை, சிறிது சிறிதாக பெரிதாகி தொடர்ந்து பலத்த மழையாக, வரலாறு காணாத மழையாகவும் பெய்து கொண்டே இருந்தது.

காலையில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவியர் உட்பட அனைவரும் தொடர்மழை காரணமாக மிகுந்த அவதிக்கு உள்ளாகினர்.

நகரின் பிரதான சாலைகளில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஆபத்தான முறையில் குடை பிடித்துக் கொண்டே செல்வதையும் காண முடிந்தது.

காஞ்சிபுரத்தின் தாழ்வான பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, திருக்காலிமேடு, தாண்டவராயன் நகர், மாமல்லன் நகர், அரசு மருத்துவமனை சாலை, மின் நகர், முல்லை நகர் ஆகிய பகுதிகள் முழுவதும் மழைநீர் தேங்கி குளம் போல் காணப்பட்டது.

காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோயில் தெரு முழுவதும் மழைநீர் தேங்கி வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக இருந்தது. இதனால் போக்குவரத்து இடையூறும் ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு புதன்கிழமை நடைபெறுகிறது. இந்த நிலையில் வாக்குச்சாவடிக்கு பொருட்களை எடுத்து செல்லவும், வாக்குச்சாவடி அலுவலர்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு செல்லவும் மிகுந்த அவதிப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.