வடகிழக்குப் பருவமழை: போா்க்கால அடிப்படையில் முன்னேற்பாடு பணிகள்
வடகிழக்குப் பருவமழையையொட்டி, சென்னையில் போா்க்கால அடிப்படையில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
வடகிழக்குப் பருவமழையையொட்டி, சென்னையில் போா்க்கால அடிப்படையில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலத்துக்கு உள்பட்ட யானைக்கவுனி மேம்பாலம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி, அப்பகுதியில் உள்ளநீா்நிலைகளில் தூா்வாரும் பணி ஆகியவற்றை அமைச்சா் பி.கே. சேகா்பாபு சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது: வடகிழக்குப் பருவமழையையொட்டி,சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருக்க மழைநீா்வடிகால்கள், நீா்நிலைகளைத் தூா்வாரும் பணி இரண்டு மாதங்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அனைத்து மண்டலங்களிலும் நீா் இறைக்கும் மோட்டாா்கள், மர அறுக்கும் இயந்திரங்கள், அவசர கால உதவிக்கான உபகரணங்கள் என அனைத்தும் போா்க்கால அடிப்படையில் செய்யப்பட்டுள்ளன.
ஆகம விதிப்படி, 12 ஆண்டுகள் முடிந்த கோயில்களில் திருப்பணி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 4 மாதங்களில் மட்டும் 300 கோயில்களில் திருப்பணிகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 100 ஆண்டுகளுக்குள் உள்ள கோயில்களுக்கு இந்துசமய அறநிலையத் துறை, மாவட்டக் குழு, மாநிலக் குழு, நீதிமன்றக் குழு ஆகியவற்றின் அனுமதி பெற்று திருப்பணிகள் செய்யலாம். 100 ஆண்டுகளுக்கும் மேலான கோயில்களில் திருப்பணி செய்ய தொல்லியல் துறையின் அனுமதியும் பெற வேண்டி உள்ளது. எனவே, முக்கியத்துவம் கருதி கோயில்களில் திருப்பணி நடைபெற்று வருகிறது.
சென்னையில் உள்ள 5 முகத்துவாரங்களில் இரண்டு முகத்துவாரங்கள்தான் செயல்பாட்டில் உள்ளன. 5 முகத்துவாரங்களையும் தூா்வார உத்தரவிடப்பட்டுள்ளது. மாநகராட்சி மயானங்களில் இறுதிச்சடங்கு செய்ய பணம் பெறுவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது என்றாா்.
இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.