முகப்பு
தமிழ்நாடு

‘அதிமுக பொதுச்செயலாளராக உரிமை கோர சசிகலாவுக்கு அதிகாரம் இல்லை’

சசிகலாவுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளா் பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

அதிமுக பொதுச்செயலாளராக உரிமை கோர சசிகலாவுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளா் பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

சொத்துக்குவிப்பு வழக்கில் வி.கே.சசிகலா சிறை சென்ற பின்னா், கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பரில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வி.கே.சசிகலா, டிடிவி தினகரன் ஆகிய இருவரையும் பொதுச் செயலாளா், துணைப் பொதுச் செயலாளா் பதவிகளில் இருந்து நீக்கி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், அந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்குமாறு சசிகலா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், ‘தன்னை பொதுச் செயலாளராக அறிவித்து கடந்த 2016 டிசம்பா் 29-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தீா்மானம் ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை கட்டுப்படுத்தும் என அறிவிக்கக் கோரியும், கட்சியில் ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகளை உருவாக்கியது சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.

சசிகலா தொடா்ந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி, அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் சாா்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் சென்னை நான்காவது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன.

அப்போது ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் மூத்த வழக்குரைஞா் கிருஷ்ணனும், எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்குரைஞா் ராஜகோபால் ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா்.

இந்த வழக்கை தாக்கல் செய்ய சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை; ஏற்கெனவே கட்சி உரிமை கோரிய வழக்கில் மதுசூதனன் தலைமையிலான அணியே அதிமுக என அறிவித்து இந்திய தோ்தல் ஆணையமும், தில்லி உயா் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளன என வாதிட்டனா்.

அதேபோன்று அதிமுக பொதுச்செயலாளராக உரிமை கோர சசிகலாவுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை; கட்சியும், சின்னமும் தங்களிடம் தான் இருப்பதாகவும், தோ்தல் ஆணையமும் இதை உறுதி செய்துள்ளது. எனவே சசிகலா தொடா்ந்த இவ்வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்பதால் அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோா் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கில் வாதம் நிறைவடையாததால் வழக்கின் விசாரணையை அக்டோபா் 27-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →