ஐந்து மலைகளைத் தாண்டி வர வேண்டும்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு
தமிழக அரசு தற்போது ஐந்து மலைகளைத் தாண்டி வர வேண்டியுள்ளது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
அனைத்துத் துறை செயலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழக அரசு தற்போது ஐந்து மலைகளைத் தாண்டி வர வேண்டியுள்ளது என்று கூறினார்.
அரசின் திட்டங்களை விரைந்து செயல்படுத்துவது குறித்து அனைத்துத் துறை செயலாளர்களுடன் தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தை தொடக்கி வைத்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், நாம் இப்போது ஐந்து மலைகளைத் தாண்டி வர வேண்டியுள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது, திமுக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிட்டோம். அதில் 500 வாக்குறுதிகள் அடங்கியுள்ளன. மாவட்ட ரீதியாகவும் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனி வாக்குறுதிகளை வெளியிட்டிருந்தோம்.
அதன் பிறகு, வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், தமிழக சட்டப்பேரவைத் தொடங்கியதும் ஆளுநர் உரை, நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை, மானியக் கோரிக்கை, 110-ன் கீழ் என அரசு சார்பில் அறிவிப்புகளை வௌயிட்டுள்ளோம்.
இவற்றைத் தான் நான் ஐந்து மலைகள் என்று கூறினேன். அரசு வெளியிட்ட அறிவிப்புகள் வெறும் அறிவிப்புகள், அரசாணை என்ற அளவில் நின்றுவிடக் கூடாது. அவற்றை விரைந்து செயல்படுத்துவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அதற்கு உங்கள் முழு ஒத்துழைப்பு அவசியம். தேவை. வேகமாக, விவேகமாக காரியங்களை செய்ய வேண்டும்.
அரசு அறிவித்த திட்டங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பேன் என்றும் பேரவையில் சொல்லியிருக்கிறேன். அமைச்சர்கள் மட்டுமல்ல, அதிகாரிகளுடனும் நேரடியாக செயல்திட்டங்கள் குறித்து கேட்டறிவேன். அரசு வெளியிட்ட அறிவிப்புகளை செயல்படுத்தும் போது வழக்குகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அதிகாரிகளின் கடமை என்று ஸ்டாலின் கூறினார்.