காலணி தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்
பெலாக்குப்பம் சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்தில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் காலணி தயாரிக்கும் தொழிற்சாலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.
பெலாக்குப்பம் சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்தில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் காலணி தயாரிக்கும் தொழிற்சாலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.
அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று பேசிய முதல்வர் ஸ்டாலின்,
இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய அடிக்கல் நாட்டுவிழா. எனக்கு என்ன சந்தேகம் என்றால், இது அடிக்கல் நாட்டுவிழாவா? அல்லது தொழிற்சாலையினுடைய துவக்க விழாவா? என்று சந்தேகப்படக்கூடிய அளவிற்கு, அடிக்கல் நாட்டு விழா என்றால், ஒரு ஹாலில், ஒரு சின்ன அரங்கத்திற்குள், ஒரு 100 பேர், 200 பேரை கொண்டு அதிகாரிகள், முக்கியமான அலுவலகர்களை மட்டும் உட்கார வைத்து அடிக்கல் நாட்டு விழாவை நடத்துவதுண்டு. ஆனால் இது, ஏதோ பெரிய திறப்பு விழா நிகழ்ச்சியைப் போல அமைந்திருக்கிறது. அடிக்கல் நாட்டு விழாவுக்கே இந்தக் கூட்டம் என்று சொன்னால், இந்தப் பணிகள் எல்லாம் முடிந்து அதனுடைய திறப்பு விழா நடக்கிறபொழுது என்ன கூட்டம் வரும் அப்படியென்ற எண்ணம் தான் எனக்கு இப்பொழுது வந்திருக்கிறது.
அரசின் சார்பில் எத்தனையோ துறைகள் இருக்கிறது. நான் முதலமைச்சராக மக்களால், உங்களால் தேர்தெடுக்கப்பட்டு அந்தப் பொறுப்பை ஏற்றதற்கு பிறகு, நம்முடைய ஆட்சி அமைந்ததற்குப் பிறகு, நான் அதிகம் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி எது என்று பார்த்தால், தொழில் துறையைச் சார்ந்த நிகழ்ச்சியில் அதிகமாக கலந்து கொண்டிருக்கிறேன்.
அதற்கு காரணம் என்னவென்று கேட்டால், அந்தத் துறையினுடைய அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கக்கூடிய நம்முடைய தங்கம் தென்னரசு அவர்கள். அவருக்கு ஈடுகொடுக்கக்கூடிய வகையிலே, அவருக்கு துணை நிற்கக்கூடிய வகையிலே அவருடைய தொழில்துறையைச் சார்ந்த தொழில்துறையினுடைய செயலர் கிருஷ்ணன், ஐ.ஏ.எஸ். இரண்டு பேரும் போட்டிப் போட்டுக்கொண்டு, துபைக்கு போனாலும் சரி, தில்லிக்குப் போனாலும் சரி அல்லது ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவதாக இருந்தாலும் சரி, அதில் காட்டக்கூடிய ஆர்வத்தைப் பார்த்து நானே மெய்மறந்து போயிருக்கிறேன்.
ஆகவே, எல்லாத் துறைகளிலும் ஒப்பிட்டுப் பார்க்கிறபோது, அதிகம் கலந்து கொள்ளக்கூடிய நிகழ்ச்சி இந்தத் தொழில்துறையைச் சார்ந்த நிகழ்ச்சியாக அமைந்திருப்பது உள்ளபடியே பாராட்டுக்குரிய ஒன்று.
ஏற்கனவே விழுப்புரம் மாவட்டத்தில் இன்னொரு பகுதியில் சமத்துவபுரம் என்கிற ஒரு நிகழ்ச்சியை அங்கு இருக்கக்கூடிய அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக வாழ வேண்டும் என்ற நல்ல எண்ணத்திலே முன்னாள் முதல்வர் கருணாநிதி, சமத்துவபுரம் என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி ஒற்றுமை உணர்வோடு, ஒருமித்த கருத்தோடு ஒன்றிணைந்து வாழவேண்டும் என்பதற்காக அந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. எனவே அது போன்ற ஒரு சமத்துவபுரத்தை நான், அங்கே கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை எல்லாம் திறந்து வைத்துவிட்டு, அந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டு உரையாற்றிவிட்டு, இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன்.
வீதியோரத்தில் வேலையற்றவர்கள் - வேலையற்றவர்களின் எண்ணத்தில் விபரீதங்கள்! இதுதான் வேந்தே காலத்தின் குறி; - என்று பேரறிஞர் அண்ணா ஒரு கவிதை நடையிலே, கட்டுரையிலே எழுதி சுட்டிக்காட்டியிருக்கிறார். இந்த நிலையை மாற்றுவதற்கு உருவான இயக்கம்தான் திமுக.
கல்வியில், வேலைவாய்ப்பில், பொருளாதாரத்தில், தொழில் வளர்ச்சியில், சமூகத் திறனில் நாம் யாருக்கும், எந்த மாநிலத்தவர்க்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கக்கூடிய வகையில், தமிழக அரசு எண்ணற்ற திட்டங்களை எல்லாம் இன்றைக்கு தீட்டி, அதை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
ஃபெங் டே நிறுவனத்தின் துணை நிறுவனமாகிய செய்யாறு சிறப்புப் பொருளாதார மண்டல மேம்பாட்டு நிறுவனத்தினுடைய புதிய திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதிலே நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றும் நான் உங்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். தோல் ஒரு முக்கியமான பொருளாகத் தொடர்ந்திடும் அதே வேளையில், தோல் அல்லாத காலணிகள்தான் அடுத்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கிடும். அண்மையில், நைக் போன்ற காலணித் தயாரிப்பாளர்கள், சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களாக வழங்கத் தொடங்கியுள்ளனர் என்று நான் அறிகிறேன். அவ்வாறே, தோல் அல்லாத துறைகளிலும் உங்கள் உற்பத்தி நடவடிக்கைகளை தொடர்ந்து விரிவுபடுத்திடுமாறும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
சமீபத்தில் தலைநகர் தில்லியில் நான் சென்றிருந்தபோது பிரதமரை சந்தித்தபோது, அதிகரித்து வரும் காலணிகளுக்கான உள்நாட்டுத் தேவை மற்றும் ஏற்றுமதித் தேவைகளை சமாளிக்க, தமிழ்நாட்டில் உள்ள உற்பத்திக் குழுமங்களை பயன்படுத்தலாம் என்று தெரிவித்திருந்தேன். “உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை” அந்தத் திட்டத்தினை அறிமுகப்படுத்தவும் கோரிக்கை வைத்திருந்தேன்.
தமிழகத்திறகு என “தோல் மற்றும் காலணிக் கொள்கை”, விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. ஏற்கனவே, பல காலணி தயாரிப்பு நிறுவனங்கள், தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஆர்வம்காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, அத்துறையில், அதிக அளவில் முதலீடுகளை ஈர்த்திட முடியும் என்று நான் நம்புகிறேன்.
மோட்டார் வாகனத்துறை, மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம், பட்டாசு ஆலைகள், காலணி மற்றும் தோல் பொருட்கள் துறை உள்ளிட்ட பல துறைகளிலும் பெண்கள் பெருமளவில் பணிசெய்து வருகிறார்கள்.
சமூகநீதி மற்றும் சமூகப் பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்தும் வகையில், “மகளிர் கொள்கை” ஒன்றை விரைவில் அரசின் சார்பில் நாங்கள் வெளியிட இருக்கிறோம்.
நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த 10 மாதங்களிலேயே, பெருமையோடு சொல்கிறேன், இதுவரை 68 ஆயிரத்து 375 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
2 லட்சத்து 5 ஆயிரத்து 402 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க இருக்கிறது. ஒன்றிய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை தன்னுடைய அறிக்கையில் அகில இந்திய அளவில், அன்னிய முதலீடு கடந்த ஆண்டை விட 16 விழுக்காடு குறைந்திருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கக்கூடிய அதே வேளையில், சென்ற ஆண்டு தமிழ்நாட்டில் ஈர்க்கப்பட்ட அன்னிய முதலீடுகளை விட, இந்த ஆண்டு ஈர்க்கப்பட்ட முதலீடுகள் 41.5 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்திருக்கிறது. இந்த வளர்ச்சி என்பது ஒரு மிகப் பெரிய சாதனை. இது இந்த நல்லாட்சிக்குக் கிடைத்திருக்கக்கூடிய ஒரு நல்ல பெயர்!
புதிய முதலீடுகளையும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் செய்யுங்கள். தமிழ்நாட்டு இளைஞர்களின் திறனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என கேட்டுக்கொள்கிறேன்.
உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் திறந்த மனதுடன் செய்து தந்திட இந்த அரசு என்று கூட சொல்லமாட்டேன், நம் அரசு தயாராக இருக்கிறது என்ற அந்த உறுதியைச் சொல்கிறேன் என்றார் ஸ்டாலின்.