தமிழ்நாடு

மகளிர் இருசக்கர வாகனத் திட்டத்துடன் இலவசப் பேருந்து திட்டத்தை ஒப்பிடுவது நியாயமற்றது: ஓபிஎஸ்

அம்மா இருசக்கர வாகனத் திட்டத்திற்கு மாற்றாக மகளிர் இலவசப்  பேருந்து திட்டத்தை ஒப்பிடுவது நியாயமற்ற செயல் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

DIN

அம்மா இருசக்கர வாகனத் திட்டத்திற்கு மாற்றாக மகளிர் இலவசப்  பேருந்து திட்டத்தை ஒப்பிடுவது நியாயமற்ற செயல் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் தோற்றுவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த திட்டங்களான தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், அம்மா மினி கிளினிக், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்பட்டு வந்த 2,500 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை ரத்து செய்தது, அம்மா உணவகங்களின் பெயர்களை மாற்றுவது என்ற வரிசையில் அம்மா மகளிர் இரு சக்கர வாகனத் திட்டம் முடக்கப்பட்டு இருக்கிறது என்பதை நேற்று சூசகமாக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் தமிழ்நாடு பேரவையில் அறிவித்து இருப்பது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டது.

2018 ஆம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத் தேர்தலின்போது பணிபுரியும் பெண்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இருசக்கர வாகனத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அந்த வாக்குறுதிக்கிணங்க, அம்மா மகளிர் இருசக்கர வாகனத் திட்டம், 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி பிரதமரால் துவக்கி வைக்கப்பட்ட அற்புதமான திட்டமாகும். 

இத்திட்டத்தின்படி, இரு சக்கர வாகன விலையில் 50 விழுக்காடு அல்லது 25,000 ரூபாய் இதில் எது குறைவாக உள்ளதோ அந்தத் தொகை மானியமாக பயனாளிகளுக்கு அளிக்கப்பட்டு வந்தது. இத்திட்டத்தின்கீழ் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மகளிர் பயனடைந்தனர். 2020-2021 ஆம் ஆண்டிலும் இத்திட்டத்திற்காக 253 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்தத் திட்டம் பெண்களிடையே மிகப் பெரிய வரவேற்பினைப் பெற்றது.

இந்த நிலையில் நேற்று தமிழ்நாடு செட்டப்பேரவையில் பேசிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர், நகரப் பேருந்துகளில் பயணிப்பதற்கு தாய்மார்கள், சகோதரிகளுக்கு இலவசமாக பயணம் செய்கின்ற வாய்ப்பை முதலமைச்சர்  தந்து இருக்கிறார் என்றும், பெட்ரோல், டீசல் விலை இன்றைக்கு உயர்ந்திருக்கின்ற இந்த நிலையில் இரு சக்கர வாகனத் திட்டம் தொடர்ந்தால், இன்னும் அவர்களுக்கு மேலும் கூடுதல் சுமையாக இருக்கும் என்று தெரிவித்து இருக்கிறார். அதாவது, இந்தத் திட்டம் கைவிடப்பட்டு விட்டது என்பதுதான் இதற்குப் பொருள். திமுக அரசின் இந்தச் செயலுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

அம்மா இருசக்கர வாகனத் திட்டத்திற்கு மாற்றாக மகளிர் இலவசப்  பேருந்து திட்டத்தை ஒப்பிடுவது நியாயமற்ற செயல். ஒரு திட்டத்திற்கு மாற்றாக இன்னொரு திட்டத்தை கூறுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. இன்னும் சொல்லப் போனால், இலவசப் பேருந்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாகவும், நாட்கள் செல்ல செல்ல மகளிர் இலவசப் பேருந்து திட்டம் நீர்த்துப் போய்விடுமோ என்ற அச்சத்தில் மகளிர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்தத் திட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது என்பதாலும், பிரதமரால் 'அம்மா' என்கிற அடைமொழியுடன் கூடியத் திட்டம் என்பதாலும், இத்திட்டத்தை திமுக அரசு முடக்கியுள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட ஒவ்வொரு திட்டத்திற்கும் மூடுவிழா நடத்தும் வேலையைத்தான் திமுக அரசு செய்து கொண்டிருக்கிறது.

'சொன்னதை செய்வோம்' என்பதைவிட 'சொல்லாததையும் செய்வோம்' என்பதுதான் கடந்த பதினோறு மாத கால தி.மு.க. ஆட்சியின் சாதனை. கொடியவன் என்று மக்களிடம் கெட்ட பெயர் வாங்கும் அரசனின் ஆட்சி விரைவில் வீழ்ந்து விடும் என்று வள்ளுவரின் வாக்கினை மனதில் நிலை நிறுத்தி, அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தினை ரத்து செய்யும் முடிவினை கைவிட வேண்டுமென்று முதல் அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ. 1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு! டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

மேஷ ராசிக்கு உதவி கிடைக்கும்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT