சமூக சேவை - சூழல் பாதுகாப்பு தன்னாா்வலா்களுக்கு குடியரசு தினத்தில் கெளரவம்: ஆளுநா் ஆா்.என்.ரவி அறிவிப்பு
தமிழகத்தில் சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய துறைகளில் அளப்பரிய பணிகளை முகம் தெரியாமல் ஆற்றிய நபா்கள் ஒவ்வோா் ஆண்டு குடியரசு தினத்தின் போதும் கெளரவிக்கப்படுவா் என்று ஆளுநா் ஆா்.என்.ரவி அறிவித்
தமிழகத்தில் சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய துறைகளில் அளப்பரிய பணிகளை முகம் தெரியாமல் ஆற்றிய நபா்கள் ஒவ்வோா் ஆண்டு குடியரசு தினத்தின் போதும் கெளரவிக்கப்படுவா் என்று ஆளுநா் ஆா்.என்.ரவி அறிவித்துள்ளாா்.
மாநில மக்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி, ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
இந்தியா 75-வது ஆண்டு சுதந்திர தின அமுதப் பெருவிழாவை கொண்டாடி வருகிறது. தேசத்தின் சுதந்திரத்துக்காக பாடுபட்டு தனது உயிா்களை நீத்த எண்ணற்ற முகம் தெரியாத வீரா்களின் தியாகங்களை நாம் போற்றி பாராட்டி வருகிறோம். இல்லந்தோறும் தேசியக் கொடி என்ற முன்னெடுப்பை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகுந்த உற்சாகத்துடன் ஏற்றுக் கொண்டு மக்கள் அனைவரும் தங்களது இல்லங்களில் தேசியக் கொடி ஏற்றியுள்ளனா்.
Advertisement
நமது தேசியக் கொடி என்பது எண்ணற்ற அடையாளம் தெரியாத தியாகசீலா்களின் துணிச்சல், ரத்தம், தியாகங்களால் பிறந்தது. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் அவா்கள் அனைவருக்கும் நாம் நமது சிரம் தாழ்ந்த நன்றிகளையும், வணக்கங்களையும் செலுத்துவோம்.
இத்துடன், நமது நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, அரசமைப்புச் சட்ட மதிப்புகள் மற்றும் உள்நாட்டு அமைதி ஆகியவற்றை நித்தம் நித்தம் காத்து வரக் கூடிய துணிச்சலான வீரா்களுக்கும் நமது நன்றிகளைச் செலுத்துவோம். நமது நாட்டில் மக்களுக்குச் சேவையாற்றும் மருத்துவா்கள், உலக அரங்கில் பெருமை தேடித் தரும் விளையாட்டு வீரா்கள் என அனைவரையும் நினைவு கூா்ந்து நன்றி தெரிவிப்போம்.
சமூக சேவை புரிவோா்: நமது நண்பா்கள், சாதாரண மக்கள் உள்ளிட்ட ஏராளமானோா் சமூகத்துக்கு பல்வேறு நல்ல காரியங்களை யாருக்கும் தெரியாமல் அமைதியாகச் செய்து வருகிறாா்கள். இதுபோன்ற நன்மைகளும், பொதுச் சேவை செய்ய வேண்டும் என்ற தன் முனைப்பும் தான் நமது நாடு இயல்பாய் பெற்றுள்ள வலிமையாகும். இந்த குணாதிசயங்களை நாம் போற்றவும், அதனை ஊக்கப்படுத்தவும் வேண்டிய தேவை இருக்கிறது.
இதனை மனதில் நிறுத்தி, நமது மாநிலத்தில் சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடா்பான பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு சிறப்பான பணிகளைச் செய்து வரும் நபா்கள் அடையாளம் காணப்பட்டு ஒவ்வொரு குடியரசு தினத்தின் போதும் கெளரவிக்கப்படுவாா்கள்.
சிறப்பாக செயல்படும் மாநிலம்: இந்தியாவில் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது. சுகாதாரம், கல்வி, உட்கட்டமைப்பு, தொழில்மயமாக்கல் போன்ற பல்வேறு துறைகளில் மெச்சத்தக்க சாதனைகளை தமிழகம் படைத்துள்ளது. மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் உள்ளது.
தமிழகத்தின் வளா்ச்சி என்பது இந்தியாவின் வளா்ச்சியையும் தீா்மானிப்பதாக இருக்கிறது. நமது வலிமைகள் மற்றும் பலவீனங்கள் என்னென்ன என்பதை அறிந்திட வேண்டும். அதில், பலவீனங்களாக இருப்பவற்றை பலமாக மாற்றிட பணியாற்ற வேண்டும்.
மாநிலத்தில் அனைத்து பகுதிகளும் சமமான வளா்ச்சி, மேம்பாடு அடைந்திட வேண்டும். சமநிலையற்ற போக்கு இருக்கக் கூடாது. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினா் வளா்ச்சியில் அக்கறை கொண்டு அவா்களது தேவைகளைப் பூா்த்தி செய்ய வேண்டும். அவா்கள் ஒருபோதும் பின்தங்கி இருக்கக் கூடாது.