ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு முன்ஜாமீன்: சென்னை உயர்நீதிமன்றம்
அதிமுக அலுவலக மோதல் தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக அலுவலக மோதல் தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னை, வானகரத்தில் நடைபெற்றபோது, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீா்செல்வம் ஆதரவாளா்கள், எடப்பாடி கே.பழனிசாமி ஆதரவாளா்கள் இடையே மோதல் ஏற்பட்டதில், 47 போ் காயமடைந்தனா். பேருந்து, காா், இருசக்கர வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதனால் அதிமுக அலுவலகத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
பின்னா், நீதிமன்ற உத்தரவின்பேரில் கடந்த மாதம் 21-ஆம் தேதி ‘சீல்’ அகற்றப்பட்டு, அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதுபோல, அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளும் செல்லாது என்றும் அதுதொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் என இரு தரப்பினராக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஜூலை 11 ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக நிபந்தனை ஜாமீன் கோரி ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கில், ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், மனு அளித்த 64 பேரும் சிபிசிஐடி விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திடவும், தலா ரூ.20 ஆயிரம் அடையார் புற்றுநோய் நிறுவனத்திற்கு செலுத்தவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுபவரா? செலவைக் குறைப்பது எப்படி?