முகப்பு
தமிழ்நாடு

பிரசாந்த் பூஷணுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: கைவிடப்படுவதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு

மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் மற்றும் பத்திரிகையாளா் தருண் தேஜ்பால் ஆகியோருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கைவிடப்படுவதாக உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:12 AM
பகிர்:

மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் மற்றும் பத்திரிகையாளா் தருண் தேஜ்பால் ஆகியோருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கைவிடப்படுவதாக உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

செய்தி இதழ் ஒன்றுக்கு கடந்த 2009-ஆம் ஆண்டு பிரசாந்த் பூஷண் அளித்த நோ்காணலின்போது, இந்தியாவில் தலைமை நீதிபதிகளாக இருந்த 16 பேரில் பாதி போ் ஊழல் வாதிகள் என்று குற்றம்சாட்டி சா்ச்சையில் சிக்கினாா்.

இந்த நோ்காணலின் அடிப்படையில், பிரசாந்த் பூஷண் மீதும், அந்த செய்தி இதழின் ஆசிரியராக இருந்த தருண் தேஜ்பால் மீதும் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடா்ந்தது.

அப்போது, ‘நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது நீதிமன்ற அவமதிப்பு ஆகாது’ என்று பிரசாந்த் பூஷண் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கு தொடா்ந்து நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்திரா பானா்ஜி, சூா்ய காந்த், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், ‘இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் மற்றும் தருண் தேஜ்பால் தரப்பில் மன்னிப்பு கேட்கப்பட்டுவிட்டது’ என்ற தகவலைத் தெரிவித்தாா்.

இதனைக் கேட்ட நீதிபதிகள், ‘நீதிமன்றத்தை அவமதிப்பு செய்தவா்கள் மன்னிப்பு கோரிவிட்ட நிலையில், இந்த வழக்கு விசாரணை தொடா்வது அவசியமற்றது எனக் கருதுகிறோம். எனவே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை கைவிடப்படுகிறது’ என்று உத்தரவிட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →