முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் விழுந்துள்ள 350 மரங்களை அகற்றும் பணியில் 30 ஆயிரம் பணியாளர்கள்!

மாண்டஸ் புயல் காரணமாக முறிந்து விழுந்துள்ள 350 மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் 30 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:04 AM
பகிர்:


மாண்டஸ் புயல் காரணமாக முறிந்து விழுந்துள்ள 350 மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் 30 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். 

அந்தமான் அருகே வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிர புயலாக வலுப்பெற்று பின்னர் புயலாக வலுவிழந்து வெள்ளிக்கிழமை 10 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடக்க தொடங்கியது.

சுமார் 5 மணிநேரத்திற்கு பிறகு சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்ததாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சனிக்கிழமை காலை வரை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருக்கும் மாண்டஸ் புயல் பின்னர் படிப்படியாக வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் கரையை கடந்த போது சென்னை மற்றும் வடகடலோர மாவட்டங்களில் 75 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசியது.

புயலால் சேதமடைந்த பகுதிகளை கண்டறிந்து பேரிடர் மற்றும் பிற குழுக்கள் அனுப்பப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. 

தொடர்ந்து வட உள்தமிழக மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாண்டஸ் புயல் காரணமாக மண்டலத்துக்கு 25 முதல் 30 மரங்கள் என 350க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. விழுந்துள்ள மரங்களை அப்புறப்படுத்தி சீரமைக்கும் பணியில் 30 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். 

மேலும், முறிந்து விழுந்துள்ள மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் இரவு முதல் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

மரம் அறுக்கும் எந்திரங்கள், ஜெனரேட்டர்கள், 911 மோட்டார் வாகனங்கள், ஜேசிபி, டிப்பர் லாரி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 

மாநகராட்சி பூங்காக்களுக்கு இரண்டு நாள்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள சுரங்கபாதைகளில் மழைநீர் தேங்காததால், வழக்கம் போல் போக்குவரத்து சேவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

தாம்பரம்: 
தாம்பரம் மாநகராட்சியில் மட்டும் 26 மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. 

விழுந்துள்ள மரங்களை சனிக்கிழமை மாலைக்குள் அப்புறப்படுத்துதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் தெரிவித்துள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →