முகப்பு
தமிழ்நாடு

திருவோணமங்கலம் ஞானபுரி 33 அடி உயர ஆஞ்சனேயர் கோயில் விழா

நீடாமங்கலம் அருகேயுள்ள திருவோமங்கலம் ஞானபுரி சங்கடஹர ஸ்ரீ மங்கல மாருதி 33 அடி உயர ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:10 AM
சிறப்பு அலங்காரத்தில் 33 அடி உயர ஆஞ்சனேயர்.
பகிர்:

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகேயுள்ள திருவோமங்கலம் ஞானபுரி சங்கடஹர ஸ்ரீ மங்கல மாருதி 33 அடி உயர ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகேயுள்ளது திருவோணமங்கலம் ஸ்ரீ ஜகத்குரு பதரி சங்கராச்சாரியார் சமஸ்தானம் ஸ்ரீ சேத்திர சகடபுர ஸ்ரீவித்யா பீடம் ஞானபுரி சித்திரகூட  ஷேத்திரத்தில் ஸ்ரீ சங்கடஹர மங்கல மாருதி தேவஸ்தானம் அமைந்துள்ளது. இங்கு 33 அடி உயரத்திற்கு இடுப்பில் சஞ்சீவினி மூலிகைகளுடன், விஸ்வரூபமாக ஆஞ்சனேயர் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 

ஞானபுரி கோயிலில் சீதாகல்யாண உற்சவத்தை நடத்தி வைக்கிறார் உடையாளூர் கல்யாணராமபாகவதர்.

ஆஞ்சனேயர் சுவாமிக்கு வலது புறம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர், இடது புறம் ஸ்ரீகோதண்டராமர், சீதாதேவி, லட்சுமணர், பவ்ய ஆஞ்சனேய சுவாமி எழுந்தருளி உள்ளனர். ஸ்ரீ சங்கடஹர மங்கள மாருதி தேவஸ்தானத்தில் மார்கழி மாதம் மூல நட்சத்திர திருநாளான இன்று 23 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 19 ஆம் தேதி முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. அனுமன் ஜெயந்தி  திருநாளான இன்று விஸ்வரூப ஆஞ்சனேய சுவாமி மஞ்சள் பட்டு உடுத்தி, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காலை 10 மணிக்கு ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணா நந்த தீர்த்த சுவாமிகள்  முன்னிலையில் விஸ்வரூப ஆஞ்சனேய சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், சீதா கல்யாண உற்சவமும் நடைபெற்றது. 

சீதாகல்யாண வைபவத்தில் கலந்து கொண்ட பக்தர்கள்.

தொடர்ந்து ஸ்ரீ ஸ்ரீ ஆச்சாரிய மகா ஸ்வாமிகள் அனுமன் ஜெயந்தி மற்றும் திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அருளாசியும், திருமாங்கல்ய சரடு, மஞ்சள் கிழங்கு, குங்குமம், பூஜிக்கப்பட்ட ஒரு ரூபாய் நாணயம் ஆகிய அருட்பிரசாதங்களையும் வழங்கினார்.

உஞ்சவிருத்தி பஜனை, சீதா திருக்கல்யாண உற்சவத்தை உடையாளூர் டாக்டர் 
ஸ்ரீ கல்யாண ராமன் பாகவதர் மற்றும் அவரது குழுவினர் செய்து வைத்தனர். 
முன்னதாக சீதா கல்யாண உற்சவத்திற்கு பக்தர்கள் சீர்வரிசையினை எடுத்து வந்தனர்.

அனுமன் ஜெயந்தி மற்றும் சீதா கல்யாண உற்சவத்தை திரளான பக்தர்கள் கண்டு தரிசித்து திருவருளையும், குருவருளையும்  பெற்றனர். விழா ஏற்பாடுகளை ஸ்ரீ சங்கடஹர மங்கள மாருதி தேவஸ்தான ஸ்ரீகாரியம் சந்திர மௌலீஸ்வரர், தர்மாதிகாரி ரமணி அண்ணா மற்றும் அறங்காவலர்கள் ஜெகன்நாதன், வெங்கட்ராமன் ஆகியோர் செய்து இருந்தனர்.

இதேபோல் நீடாமங்கலம் வீர ஆஞ்சனேயர் கோயில், நீடாமங்கலம் சந்தானராமர் கோயில், ஆலங்குடி அபயவரதராஜப் பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →