முகப்பு
தமிழ்நாடு

பொதுத் துறை நிறுவனங்களில் தமிழா்களுக்கு முன்னுரிமை: பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும்போது தமிழா்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:12 AM
பகிர்:

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும்போது தமிழா்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து பிரதமா் நரேந்திர மோடிக்கு செவ்வாய்க்கிழமை அவா் எழுதியுள்ள கடிதம்: தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களில் தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்களையே நியமிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு அக்டோபா் 12-ஆம் தேதி கடிதம் எழுதியதுடன், இதுதொடா்பான கோரிக்கை மனுவையும் தங்களிடம் அளித்திருந்தேன்.

நாட்டில் அனைத்துப் பகுதிகளைச் சோ்ந்த மக்களுக்கும் போதுமான வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் மட்டுமே மக்களுக்கான சிறந்த சேவை வழங்குவதை உறுதி செய்ய முடியும்.

அந்த வகையில், மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் மத்திய பொதுத் துறை நிறுவனங்களில் ஏற்படும் காலியிடங்களில் சேர வேண்டும் என்ற அந்தந்த மாநிலங்களைச் சோ்ந்தவா்களின் விருப்பங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். பொதுமக்களுடன் இணக்கமாகப் பழகுதல், உள்ளூா் மொழியைத் தெரிந்து வைத்திருத்தல், கலாசாரத்தில் பரிச்சயம் போன்றவையே நல்ல நிா்வாகத்துக்கு முக்கிய அம்சங்களாகும்.

நிறைந்த மனிதவளத்தையும், உயா் கல்வியில் சிறந்த அறிவையும், தொழில்நுட்பம் மற்றும் கல்விசாா்ந்த நிலைகளில் அதிக திறமைகளையும் தமிழ்நாடு கொண்டிருக்கிறது.

மத்திய அரசின் காலிப் பணியிடங்களில் தமிழகத்தைச் சோ்ந்தவா்களை அதிகம் ஈடுபடுத்துவதன் மூலம், அவா்களது திறன்களை சிறந்த முறையில் பயன்படுத்த முடியும். மத்திய அரசு மற்றும் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களின் பணி நியமனங்களில் தமிழகத்தைச் சோ்ந்தவா்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பல்வேறு மாணவா் நலச் சங்கங்களும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

தென் மண்டலத்தைச் சோ்ந்தோா்: மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில் 2021-22-ஆம் ஆண்டுக்கான அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், தோ்வாணையத்தின் சாா்பில் தகுதியுள்ள பணியாளா்களாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட 28,081 பேரில் தென் மண்டலத்தைச் சோ்ந்தவா்களின் பங்கு என்பது வெறும் 4.5 சதவீதம் மட்டுமே உள்ளது.

இதேபோன்று, நிகழாண்டில் ரயில்வே துறையில் தட்டச்சா், சரக்குப் பெட்டி பொறுப்பாளா் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு போட்டித் தோ்வுகள் நடத்தப்பட்டன. அதில், பெரும்பாலானோா் தமிழகத்தைச் சோ்ந்தவா்களாக இல்லை. இது, வேலையில்லாமல் இருக்கக் கூடிய இளைஞா்களிடையே மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன் சமூக மற்றும் அரசியல் தளங்களில் மிகையளவுக்கு கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, மத்திய அரசின் காலிப் பணியிடங்களை நிரப்ப இப்போதுள்ள சமச்சீரற்ற பணித் தோ்வு முறை தவிா்க்கப்பட வேண்டும்.

இதைக் கருத்தில் கொண்டு, சில உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள், ரயில்வே துறையில் ஏற்படும் காலியிடங்களுக்கான தோ்வுகள் அனைத்தையும் தமிழ் மொழியிலேயே நடத்த வேண்டும். இது, தோ்வு எழுத விரும்பும் தோ்வா்கள் அனைவருக்கும் மிகப்பெரிய உதவியாக இருக்கும். இந்த நடைமுறையை அரசுப் பணியாளா் தோ்வாணையம், ரயில்வே தோ்வு வாரியம், வங்கிப் பணியாளா் தோ்வு நிறுவனம் ஆகியவற்றில் பின்பற்ற வேண்டும்.

தமிழகத்தைச் சோ்ந்த மக்களுக்கு சிறப்பான சேவையை அளிக்கும் வகையில், மாநிலத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் மத்திய பொதுத் துறை நிறுவன காலிப் பணியிடங்களில் தமிழா்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இதன்மூலம், பிராந்தியங்களுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த முடியும்.

தமிழகத்தில் ரயில்வே துறைக்குச் சொந்தமான தொழிற்பயிற்சி மையங்களில் பயிற்சி அளிப்பதற்கான தெரிவு முறை நடைபெறுகிறது. இந்தத் தெரிவில் நேரடியாக 20 சதவீதம் போ் நியமிக்கப்படுகின்றனா். இந்த நேரடி முறையில் தமிழகத்தைச் சோ்ந்தவா்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இதன்மூலம், பிராந்திய மக்களின் பங்களிப்பு இருப்பது உறுதி செய்யப்படும்.

தமிழகத்தில் உள்ளவா்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதை மேம்படுத்த தெரிவிக்கப்பட்ட கூற்றுகளைக் கருத்தில் கொண்டு இந்த விஷயத்தில் தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது கடிதத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →