முகப்பு
தமிழ்நாடு

'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' பட்டம் போதாது: ஸ்டாலின் பேச்சு

“கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பட்டம் நமக்கு போதாது. உயர் கல்வியில், ஆராய்ச்சிக் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பட்டத்தை நாம் பெற்றாக வேண்டும்” என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:31 AM
'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' பட்டம் போதாது: மீனாட்சி கல்லூரியில் ஸ்டாலின் பேச்சு
பகிர்:

சென்னை: “கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பட்டம் நமக்கு போதாது. உயர் கல்வியில், ஆராய்ச்சிக் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பட்டத்தை நாம் பெற்றாக வேண்டும்” என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, கோடம்பாக்கம், மீனாட்சி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரியின் சமூக மேம்பாட்டிற்கான புத்தாக்கத் திட்டத்தினை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அப்போது, பள்ளிகள், மேனிலைப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், உலக ஆராய்ச்சி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இருப்பது போல எந்த மாநிலத்திலும் கிடையாது, அதுவும் தமிழ்நாட்டுக்குத்தான் பெருமை. தமிழ்நாட்டு இளைஞர்கள் உலகத்தின் அனைத்து நாடுகளிலும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். உயர் பொறுப்புக்களில் இருந்து கொண்டிருக்கிறார்கள். இந்த இளைஞர்கள் எல்லாம் தமிழ்நாட்டின் உயர்கல்வியால் உயர்ந்தார்கள், உயர்ந்த நிலைக்குச் சென்றவர்கள், அந்த நிலையை இன்னும் கூடுதலாக நாம் உயர்த்தவேண்டும்.
ஆய்வுகள், ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் இன்னும் அதிகமாக வேண்டும். வெளிநாடுகளில் இருக்கும் புதுவிதமான படிப்புகள், பட்டங்கள் அனைத்தையும் தமிழ்நாட்டின் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் நாம் புகுத்தவேண்டும். இதை நான் கடந்த மாதம் 25-ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் குறிப்பிட்டுச் சொன்னேன்.

இந்தக் கல்லூரியில் இன்றையதினம் சமூக மேம்பாட்டிற்கான புத்தாக்கம் எனும் திட்டத்தை நீங்கள்  ருவாக்கியிருக்கியிருக்கிறீர்கள். சமுதாயத்தில் மாற்றுத்திறனாளிகள், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலே இருக்கக்கூடிய பிரிவினர் மற்றும் பல்வேறு சூழல்களால் நலிவடைந்த பெண்கள், இதையெல்லாம் மனதில் நாம் உருவாக்கிக் கொண்டு அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்து, அவர்களது வாழ்வில் உயர்வினை கொண்டு வருவதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கமாக அமைந்திருக்கிறது.

மாணவர்கள் தாங்கள் கல்வி கற்கும் பருவத்திலேயே சமுதாயத்தில் உள்ள தேவைகளை கண்டறிந்து, தங்களது கல்லூரியில் அமைந்துள்ள ஆய்வுக்கூடம், நூலகம் மற்றும் பேராசிரியர்கள் துணை கொண்டு தங்களது கற்பனைத் திறனையும், தொழில்நுட்பத்தையும், படைப்பாற்றலையும், கண்டறிந்து செயலாக்கத்தை ஊக்குவிக்க இந்தத் திட்டம் நிச்சயம் உதவும்.

நலிவுற்ற மக்களின் தேவைகளை கண்டறிந்து நவீன தொழில்நுட்பம் மூலம் தீர்வுகாண இந்தத்திட்டம் உதவும். இந்தத்திட்டத்தின் தொடக்கமாக இக்கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய சமூகப் பயன்பாட்டிற்கான எளிமையான சிறந்த தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய, குறைந்த பொருட்செலவிலான படைப்புகளை பார்க்கும்போது இவர்கள் இதுபோல இன்னும் பல்வேறு கண்டுப்பிடிப்புகளைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி, எளிய மக்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று நான் மனந்திறந்து இந்த மாணவச் செல்வங்களை வாழ்த்துகிறேன்.

இந்தத் திட்டங்களை மக்களுடைய பயன்பாட்டிற்கு வழங்குவதில் நான் உள்ளபடியே பெருமைப்படுகிறேன். முன்னாள் முதல்வர் கருணாநிதி இந்தக் கண்டுபிடிப்புகளைப் பார்த்திருந்தால் நிச்சயமாக அவரும் பாராட்டியிருப்பார், வாழ்த்தியிருப்பார். அவர்தான் நாட்டிலேயே முதல்முறையாக மாற்றுத்திறனாளிக்கு என்று ஒரு தனி துறையே உருவாக்கினார். அந்தத்துறையை தன்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இப்பொழுது நான் அதை நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறேன். ஆகவே கண்ணும்கருத்துமாக அதைக் கருணாநிதி பார்த்தார்.

இதுபோன்ற கண்டுபிடிப்புகள் சிறியதாக இருந்தாலும் அவற்றின் மையமாக இருக்கும் மனிதநேயப் பண்பு பெரியது. கல்லூரி துவங்கியுள்ள சமூக மேம்பாட்டிற்கான புத்தாக்கத் திட்டத்தில் உறுதுணையாக இருந்த அனைத்துப் பேராசிரியர்கள், கல்லூரி முதல்வர் மற்றும் செயலாளர் அத்தனைப் பேர்களையும் நான் இந்த நேரத்தில் வாழ்த்துகிறேன்.

“கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பட்டம் நமக்கு போதாது. உயர் கல்வியில், ஆராய்ச்சிக் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பட்டத்தை நாம் பெற்றாக வேண்டும்” என்கிற என்னுடைய விருப்பத்தை, என்னுடைய எண்ணத்தை நான் இந்த நேரத்தில் எடுத்துச்சொல்லி, அதை நோக்கி நாம் பயணிப்போம் என்று நான் உங்களையெல்லாம் அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →