முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் 15 ஆயிரத்தைக் கடந்தது தினசரி கரோனா பாதிப்பு!

தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு 15 ஆயிரத்தைக் கடந்தது. அதன்படி, செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 15,379 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:06 AM
பகிர்:

தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு 15 ஆயிரத்தைக் கடந்தது. அதன்படி, செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 15,379 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில் ஏறத்தாழ 40 சதவீதத்துக்கும் மேற்பட்ட பாதிப்பு சென்னையில் பதிவாகியுள்ளது. அதேபோன்று செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தி வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் மருத்துவக் கண்காணிப்பில் 51,335 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிக பாதிப்பு இல்லாதவா்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை வழங்க மக்கள் நல்வாழ்வுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த இரு வாரங்களாக தமிழகத்தில் பரவி வருவது ஒமைக்ரான் கரோனா தொற்று எனக் கருதப்படுவதால் ஓரிரு வாரங்களிலேயே மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கானோருக்கு தொற்று பரவும் அபாயம் இருப்பதாக மருத்துவ நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.

மக்கள் நல்வாழ்வுத் துறைத் தகவல்படி, செவ்வாய்க்கிழமை மட்டும் சென்னையில் 6,484 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 1,665 பேரும், திருவள்ளூரில் 893 பேரும், கோவையில் 863 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மற்றொருபுறம் மேலும் 3,043 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு செவ்வாய்க்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 27 லட்சத்து 17,686-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 20 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,886-ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, ஒமைக்ரான் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்த அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.