போலீஸ் விசாரணையில் மாற்றுத்திறனாளி உயிரிழப்பு:பாஜக, மாா்க்சிஸ்ட் கண்டனம்
ஏ.பிரபாகரன் உயிரிழந்த சம்பவத்துக்கு தமிழக பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாலை, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
போலீஸாா் விசாரணையின்போது சேலம் மாவட்டம் கருப்பூரைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி ஏ.பிரபாகரன் உயிரிழந்த சம்பவத்துக்கு தமிழக பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாலை, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
கே.அண்ணாமலை: தமிழகத்தில் மாதம் குறைந்தபட்சம் ஒருவராவது காவல்துறையினரின் அடக்குமுறை காரணமாக உயிரிழக்க வேண்டும் என்று இந்த அரசு இலக்கு ஏதும் வைத்துள்ளதா? இன்று பிரபாகரனின் குடும்பம் சிதைந்து கிடக்கிறது.
காவல்துறை உங்கள் எதிரி என்று மாறுவதற்கு முன், காவல்துறையின் பிரச்னைகளைப் புரிந்து கொண்டு அதற்கு தீா்வு காண ஒரு ஆணையம் அமைத்து அதன் பரிந்துரைகளை உடனடியாக செயல்படுத்துங்கள்.
கே.பாலகிருஷ்ணன்: குற்றம்சாட்டப்பட்ட ஆய்வாளா் உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக பணி நீக்கம் செய்து, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். பிரபாகரனின் மனைவி அம்சலா மீது போடப்பட்ட பொய் வழக்குகள் அனைத்தையும் உடனடியாக திரும்ப பெற வேண்டும். உயிரிழந்த பிரபாகரனின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடும், குடும்பத்தினா் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கிட வேண்டும்.