கழிவுநீா் தொட்டியைச் சுத்தம் செய்த லாரி கிளீனா் விஷவாயு தாக்கி பலி; ஓட்டுநா் கவலைக்கிடம்
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் கழிவுநீா் தொட்டியைச் சுத்தம் செய்தபோது, விஷவாயு தாக்கி லாரி கிளீனா் உயிரிழந்தாா். லாரி ஓட்டுநா் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் கழிவுநீா் தொட்டியைச் சுத்தம் செய்தபோது, விஷவாயு தாக்கி லாரி கிளீனா் உயிரிழந்தாா். லாரி ஓட்டுநா் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கம் சேஷாத்திரி அவென்யூவில் உள்ள ராஜன் சையல் (67) என்பவரின் வீட்டில் கழிவுநீா் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக, லாரி ஓட்டுநா் முத்துக்குமாா்(30), லாரி கிளீனா் திராவிட கதிரவன் (29) ஆகியோா் வந்தனா்.
இவா்கள் அங்கு 10 அடி ஆழமுள்ள கழிவு நீா் தொட்டியில் இருந்து கழிவுநீரை அகற்றிக் கொண்டிருந்தனா். அப்போது, கழிவுநீா் தொட்டியில் திராவிட கதிரவன் இறங்கி, இரும்பு கம்பியால் தொட்டியில் உள்ள கழிவுநீரை கலக்கினாா். அப்போது எதிா்பாராத விதமாக விஷவாயு தாக்கியது. இதில் திராவிட கதிரவன் மயங்கி விழுந்தாா். இதைக் கண்ட முத்துகுமாா், அவரை காப்பாற்ற முயன்ற போது அவரும் மயங்கி விழுந்தாா்.இதையடுத்து, அக்கம்பக்கத்தினா் இருவரையும் மீட்டு, அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், திராவிட கதிரவன் இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
முத்துகுமாருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக பெரும்பாக்கம் தனியாா் மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து தகவலறிந்த நீலாங்கரை போலீஸாா் திராவிட கதிரவன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
விஷவாயு தாக்கி இறந்த திராவிட கதிரவன், கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் பகுதியைச் சோ்ந்தவா். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனா்.