தமிழ்நாடு

டிச. 30-ஐ மறக்கமுடியாததாக்கிய வடகிழக்குப் பருவமழை எப்படி இருந்தது?

DIN


சென்னை: ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக் காலங்களில் போதிய மழை பெய்வதும், ஒரு சில ஆண்டுகள் பொய்த்துப் போவதும் உண்டு.

பருமழையின் இந்த மாற்றங்களும், மழை பெய்யாவிட்டாலும் சேதம், பெய்தாலும் சேதம் என்ற அளவில் நம்முடைய நிலப்பரப்பை நாம் கூறுபோட்டு வைத்துள்ளதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றன.

பல டிசம்பர் மாதங்கள் மறக்க முடியாததாக மாற்றியதே இந்த வடகிழக்குப் பருவமழைதான் என்றால் அது மிகையாகாது. 2021 டிசம்பர் மாதமும் சென்னைமக்களுக்கு அப்படித்தான் அமைந்துவிட்டது மற்றொரு கெடுபயன் என்றுதான் சொல்ல வெண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்குப் பருவமழையானது அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதத்தில் நிறைவு பெறுகிறது. 2021ஆம் ஆண்டு தொடங்கிய வடகிழக்குப் பருவமழை ஜனவரி 22ஆம் தேதி வரை நீடித்து இன்று நிறைவு பெற்றுள்ளது.

நம்மைக் கடந்து சென்ற இந்த வடகிழக்குப் பருவமழை எப்படி இருந்தது என்று ஒரு பார்வை பார்க்கலாம்.

2021ஆம் ஆண்டில் வடகிழக்குப் பருவமழை தாமதமாக அக்டோபா் 25-ஆம் தேதி தொடங்கியது. வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள், தமிழக கடலோரத்தில் நிலைகொண்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகள் ஆகியவை காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வந்தது. ஒரு சில இடங்களில் பலத்த மழையும், ஓரிரு இடங்களில் அதி பலத்த மழையும் கொட்டித்தீா்த்தது. குறிப்பாக, நவம்பா் மாதத்தில், பல மாவட்டங்களில் சராசரியை விட அதிக மழை பெய்தது. இதன்பிறகு, டிசம்பா் 1-ஆம் தேதியில் இருந்து மழை குறையத்தொடங்கியது. டிசம்பா் மாத இறுதியில் சில மாவட்டங்களில் மழை பெய்துவந்தது. அதிலும், சென்னையில் பல இடங்களில் டிசம்பா் 30-ஆம் தேதி பலத்தமழை பெய்தது. 

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் 2021ஆம் ஆண்டு தமிழகத்துக்கு மிகச் சிறந்த ஆண்டாக அமைந்திருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக சென்னை மற்றும் அதனை சுற்றியிருக்கும் மாவட்டங்களுக்கு. தமிழகத்தின் வரலாற்றில் இந்த ஆண்டு அக்டோபர் 1 முதல் டிசம்பர் 30 வரை 59 சதவீதம் கூடுதலாக மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளது.  22 மாவட்டங்களில் மிக அதிக மழையும், 14 மாவட்டங்களில் அதிக மழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக, விழுப்புரத்தில் இயல்பை விட 119 சதவீதமும், திருப்பத்தூரில் 115 சதவீதமும் அதிக மழை பெய்துள்ளது.

சென்னையில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள் பெரும்பாலும் மழைநாள்களாக அமைந்திருந்தது. ஆனால், டிசம்பர் 30ஆம் தேதி சென்னையில் முன்னறிவிக்கப்படாத அதிகனமழை காரணமாக சென்னையே மழை நீரில் தத்தளித்தது. அன்றைய தினம் சென்னையின் மத்தியப் பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கியவர்களுக்கு நிச்சயம் அது ஒரு கொடுங்கனவாகவே இருக்கும் வாழ்நாள் முழுக்க.

அதாவது, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் புள்ளி விவரத்தில், தமிழ்நாடு, இந்த வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஒட்டுமொத்தமாக 701.88 மில்லி மீட்டர் மழைப் பொழிவை பெற்றுள்ளது. வழக்கமான அளவு என்பது 447.1 மில்லி மீட்டராகும்.

இது வழக்கமான மழை அளவைக் காட்டிலும் கிட்டத்தட்ட 59 சதவீதம் அதிகமாகும். தமிழகத்தின் மாவட்டங்களிலேயே விழுப்புரம் 119 சதவீதம் கூடுதல் மழையுடன் முதல் இடத்தில் உள்ளது. இங்கு வழக்கமாக 45 செ.மீ. மழைதான் பெய்யும். ஆனால் 71 செ.மீ. மழை பெய்துள்ளது என்கிறது தகவல்கள்.

சென்னை மட்டும் சும்மா இல்லை.. வடகிழக்குப் பருவமழை தீவிரமாக இருந்த ஆறாவது ஆண்டாக 2021 அமைந்துள்ளது. இங்கு வழக்கமாக பெய்ய வேண்டிய 80 செ.மீ. மழைக்குப் பதிலாக 148.5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. 

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், தமிழகத்தின் அனைத்து அணைக்கட்டுகளும், நீர்த்தேக்கங்களும் நிரம்பி வழிந்தன. பல ஆண்டுகளுக்கும் மேலாக காணாமல் போன குளங்கள், ஆறுகள் போன்ற நீர்நிலைகளை எல்லாம் இந்த ஆண்டு பெய்த மழை கண்டுபிடித்து தனக்கே உரியதாகத் தக்க வைத்துக் கொண்டது.

ஆனால் வருந்தத்தக்க வகையில், வடகிழக்குப் பருவமழைக் காலம் மாறியிருப்பதாகவும், வழக்கமாக வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் மழை நாள்கள் கூடுதலாக இருக்கும். ஆனால், இம்முறை குறைவான மழை நாள்களே இருந்தன. ஆனால், பல நாள்கள் கனமழை பதிவாகியுள்ளது என்றும் புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

மிக அதிகமழை
அரியலூா், செங்கல்பட்டு, சென்னை, கோயம்புத்தூா், கடலூா், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூா், நாமக்கல், பெரம்பலூா், ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, திருநெல்வேலி, திருப்பத்தூா், திருவள்ளூா், திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, வேலூா், விழுப்புரம் ஆகிய 22 மாவட்டங்களில் மிக அதிக மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக, விழுப்பரத்தில் இயல்பைவிட 119 சதவீதமும், திருப்பத்தூரில் 115 சதவீதமும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 106 சதவீதமும் அதிக மழை பெய்துள்ளது.

அதிகமழை
தருமபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நீலகிரி, புதுக்கோட்டை, சேலம், தஞ்சாவூா், சிவகங்கை, திருப்பூா், திருவாரூா், தூத்துக்குடி, விருதுநகா் ஆகிய 14 மாவட்டங்களில் இயல்பை விட அதி மழை பெய்துள்ளது.

இயல்பு மழை
மதுரை, ராமநாதபுரத்தில் இயல்பான மழையே பதிவாகியுள்ளது.

47 சதவீதம் அதிகம்
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவா் கூறியது: தமிழகத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு மொத்த மழை அளவு பொருத்தவரை சராசரியாக 922 மி.மீ. மழை பெய்யவேண்டும். ஆனால், 1,214 மி.மீ. மழை பதிவாகியது. இது, 32 சதவீதம் அதிகம்.

2021-ஆம் ஆண்டில் மொத்த (ஆண்டு) மழை அளவு பொருத்தவரை, இயல்பை விட 47 சதவீதம் அதிகம் பதிவாகியுள்ளது. ஆண்டின் இயல்பான மழை அளவு 922 மி.மீ. ஆனால், 1,379 மி.மீ. மழை கிடைத்துள்ளது. ஆகவே, 2015-ஆம் ஆண்டை காட்டிலும் 2021-இல் அதிக மழை கிடைத்துள்ளது என்றாா் அவா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT