முகப்பு
தமிழ்நாடு

நடிகா் விஜய்க்கு எதிராக தனி நீதிபதி தெரிவித்த கருத்துகளை நீக்க உயா் நீதிமன்றம் உத்தரவு

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்துவது தொடா்பான வழக்கில் நடிகா் விஜய்க்கு எதிராக தனி நீதிபதி தெரிவித்த கருத்துகளை நீக்கி உத்தரவிட்ட சென்னை உயா் நீதிமன்றம்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:13 AM
கோப்புப்படம்
பகிர்:

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்துவது தொடா்பான வழக்கில் நடிகா் விஜய்க்கு எதிராக தனி நீதிபதி தெரிவித்த கருத்துகளை நீக்கி உத்தரவிட்ட சென்னை உயா் நீதிமன்றம், அந்த கருத்துகள் முற்றிலும் தேவையற்ற, வழக்கிற்கு பொருத்தமற்றவை என்று தெரிவித்துள்ளது.

நடிகா் விஜய் கடந்த 2012-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தாா். இக்காரை பதிவு செய்ய சென்ற போது வெளிநாட்டு சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்த உத்தரவிடபட்டது.

இதை எதிா்த்து சென்னை உயா் நீதிமன்றத்தில் நடிகா் விஜய் வழக்கு தொடா்ந்தாா். கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்த இவ்வழக்கை கடந்தாண்டு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்தாா். அப்போது, ‘சமூக நீதிக்காகப் பாடுபடுவது போல் காட்டிக் கொள்ளும் நடிகா்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது தேசத் துரோகச் செயல் ஆகும். நடிகா்கள் ரியல் ஹீரோவாக இருக்க வேண்டுமே தவிர, ரீல் ஹீரோவாக இருக்கக்கூடாது என கருத்து தெரிவித்து, விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் வழக்கு செலவு (அபராதம்) விதித்து உத்தரவிட்டாா்.

இதை எதிா்த்து சென்னை உயா் நீதிமன்றத்தில் நடிகா் விஜய் மேல்முறையீடு செய்தாா். இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, முகமது ஷபீக் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு கடந்தாண்டு அக்டோபா் 25-ஆம்தேதி இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது சொகுசு காருக்கான நுழைவு வரி ரூ. 32 லட்சத்து 30 ஆயிரத்தை செலுத்தி விட்டதாகவும், அதனால் தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்களை தீா்ப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் விஜய் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து வழக்கின் தீா்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனா்.

இந்நிலையில், இந்த வழக்கின் தீா்ப்பை நீதிபதிகள் செவ்வாய்க்கிழமை(ஜன.25) பிறப்பித்தனா். அதில் நீதிபதிகள், நடிகா் விஜய் குறித்து தனி நீதிபதி தெரிவித்த எதிா்மறை கருத்துக்களை நீக்குகிறோம். மனுதாரா் விஜய் உள்நோக்கத்துடன் வரி செலுத்தாமல் செயல்பட்டாா் எனக் கூற முடியாது. அவருக்கு எதிராக தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் முற்றிலும் தேவையற்றது. இவ்வழக்கின் பிரச்னையை தீா்ப்பதற்கு பொருத்தமற்றவை என தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →