முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தின் தியாக தீபங்கள் - 163: ஆர்.சி.கிருஷ்ணன்

ஈரோட்டில் பிரபல வர்த்தகக் குடும்பமொன்றில் 11.10.1916--இல் பிறந்தவர்ஆர்.சி.கிருஷ்ணன்.

Updated On : 27 ஜனவரி, 2022 at 5:21 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:44 PM

ஈரோட்டில் பிரபல வர்த்தகக் குடும்பமொன்றில் 11.10.1916-இல் பிறந்தவர்ஆர்.சி.கிருஷ்ணன். இவர், விடுதலைப் போராளி ஆர்.சி. காவேரியின் இளைய சகோதரர். 1933-இல் காங்கிரஸில் சேர்ந்து கதர்ப் பணியிலும் ஹரிஜன சேவையிலும் தீவிரமாக ஈடுபட்டார். அகில இந்திய நூற்போர் சங்கத்தின் கிளையை ஈரோட்டில் நிறுவி கதரை ஓர் இயக்கமாக்கியவர். 

காந்தியடிகளின் நிர்மாணத் திட்டங்களின் மீதிருந்த அதீத ஈடுபாட்டால் ஆர்.சி.கிருஷ்ணன் 27.6.1938 முதல் 12.1.1939 வரை ஆறரை மாதங்கள் வார்தா ஆசிரமத்தில் தங்கியிருந்து பயிற்சி பெற்றார். கிருஷ்ணனின் ஈடுபாடு காந்தியடிகளை வெகுவாகக் கவர்ந்தது. வார்தாவிலிருந்து திரும்பியவுடன் 20.2.1941--இல் ஈரோடு ஈஸ்வரன் கோயிலில் ஹரிஜன ஆலயப் பிரவேசத்தை நடத்திக் கைதானார். 15 நாள்கள் ரிமாண்டில் வைக்கப்பட்டார்.

ஹரிஜன மாணவர்களை தனது வீட்டிலேயே தங்க வைத்து பள்ளிக்கு அனுப்பிப் படிக்க வைத்தார். தனிநபர் சத்தியாகிரகத்தில் பங்கேற்று தில்லி நோக்கி நடைப்பயணமாகவே 4.4.1941-இல் ஈரோட்டிலிருந்து புறப்பட்டார். பல ஊர்களில் பரப்புரை செய்து கொண்டே சென்னையை அடைந்தார். சென்னையில் சத்தியாகிரகம் செய்தபோது கைதாகி 24.7.1941-இல் ஆறுமாதக் கடுங்காவல் தண்டனை பெற்று அலிபுரம் சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement

1942 "வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் போலீஸôரால் 31.8.1942--இல் கைது செய்யப்பட்டு குண்டாந்தடியால் கடுமையாகத் தாக்கப்பட்டார். 

24.10.1942 வரை 24 நாள்கள் ஈரோடு சப்ஜெயிலில் ரிமாண்டில் வைக்கப்பட்டிருந்தார். 24.10.1942-இல் மகாதேவ தேசாய் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரைக்காகக் கைது செய்யப்பட்டு ஓர் ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ.500 அபராதமும், கட்டத் தவறினால் ஆறு மாத சிறைத் தண்டனையும் விதிக்கப் பெற்றார்.

ஈரோடு சப்கலெக்டர் அலுவலகம் தீ வைக்கப்பட்ட வழக்கில் கைதாகி 31.8.1942 முதல் 10.11.1942 வரை இரண்டரை மாதங்கள் ஈரோடு சப்ஜெயிலில் ரிமாண்டில் வைக்கப்பட்டிருந்தார். 

விசாரணையின் முடிவில் ஒன்பதரை மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தார்.
கிருஷ்ணனுக்கும் அலமேலு மங்கைக்கும் 3.7.1944-இல் கதர்த் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதி 17.1.1945-இல் வார்தா சென்று காந்தியடிகளைச் சந்தித்தனர். 23.1.1946-- இல் சென்னை வந்திருந்த காந்தியடிகளை இருவரும் சந்தித்தனர். தன் மனைவி மற்றும் குடும்பத்தினரின் நகைகள் அனைத்தையும் காந்தியடிகளிடம் நிதியாக அளித்தார்.

1946-இல் காந்தி சேவா ஆசிரமத்தைத் தொடங்கி ஏராளமான ஹரிஜன குழந்தைகளுக்குக் கல்வி பயிலும் வாய்ப்பளித்தார். காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியினருடன் தோழமை பூண்டிருந்தார். ஜீவாவின் "காலுக்குச் செருப்புமில்லை' என்ற பிரபல பாடல் உள்பட சில புரட்சிப் பாடல்களை இசைத்தட்டுகளில் வெளியிட்டு எழுச்சியை ஏற்படுத்தினார். வாழ்நாள் முழுவதையும் நாட்டு விடுதலைக்காகவும் மக்கள் சேவைக்காகவும் அர்ப்பணித்து தனது சொத்துகளையெல்லாம் இழந்த ஆர்.சி.கிருஷ்ணன் 21.8.1973--இல் 57-ஆவது வயதில் மறைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.