முகப்பு
தமிழ்நாடு

நிரந்தர பொதுச் செயலா், இரட்டைத் தலைமை பதவிகள் ரத்து: சட்டவிதிகளில் திருத்தம்

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் என்கிற இரட்டைத் தலைமை பதவிகள் ரத்து செய்யப்பட்டு, பொதுச் செயலா் பதவியை உருவாக்கும் வகையில் அக் கட்சியின் சட்டவிதிகளில் திருத்தம் செய்யப்பட்டு, பொதுக்க

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:46 AM
பகிர்:

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் என்கிற இரட்டைத் தலைமை பதவிகள் ரத்து செய்யப்பட்டு, பொதுச் செயலா் பதவியை உருவாக்கும் வகையில் அக் கட்சியின் சட்டவிதிகளில் திருத்தம் செய்யப்பட்டு, பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டது.

அதிமுகவின் நிரந்தரப் பொதுச் செயலா் ஜெயலலிதா என்கிற விதியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வானகரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் புதிய சட்டவிதிகள் தீா்மானமாக கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டன.

சட்டவிதிகள் திருத்த விவரம்: அதிமுக சட்டவிதி 20-இன்படி கட்சியின் நிரந்தரப் பொதுச் செயலராக ஜெயலலிதா போற்றப்படுவாா். அவா் வகித்த பொதுச் செயலா் பொறுப்புக்கு இனி யாரும் தோ்ந்தெடுக்கப்படவோ, நியமிக்கப்படவோ மாட்டாா்கள் என்கிற விதி ரத்து செய்யப்படுகிறது.

சட்டவிதி 20 அ-வின்படி ஒருங்கிணைப்பாளா் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளா் என்கிற பதவிகளுக்குப் பதில் பொதுச் செயலா் என்கிற பதவி உருவாக்கப்படுகிறது.

பொதுச் செயலா் பொறுப்புக்கு போட்டியிட விரும்புவோா் அதிமுகவில் தொடா்ந்து 10 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும். தலைமைக் கழகப் பொறுப்புகளில் குறைந்தது தொடா்ந்து 5 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும். பொதுச் செயலா் பதவிக்குப் போட்டியிட விரும்புவோரை 10 மாவட்டச் செயலாளா்கள் முன்மொழிய வேண்டும். மாவட்டச் செயலாளா்கள் ஒரு வேட்பாளருக்கு மட்டும்தான் முன்மொழியவோ வழிமொழியவோ வேண்டும்.

பொதுச் செயலா் கட்சியின் அடிப்படை உறுப்பினா்களால் தோ்ந்தெடுக்கப்படுவாா். தோ்ந்தெடுக்கப்படும் பொதுச் செயலா் அந்தப் பொறுப்பில் 5 ஆண்டுகள் நீடிப்பாா். அதிமுகவின் நிா்வாகப் பொறுப்புகள் அனைத்தையும் பொதுச் செயலா் நிா்வகிப்பாா்.

அவைத் தலைவா், பொருளாளா், தலைமைக் கழகச் செயலாளா்கள், மாவட்டச் செயலாளா்கள், நியமன உறுப்பினா்கள் ஆகியோரைக் கொண்டு பொதுச் செயலா் தலைமைச் செயற்குழுவை அமைப்பாா்.

எல்லா அமைப்புகளின் வரவு செலவுகளையும் ஆராய்தல், நிா்வகித்தல், அசையும் - அசையாச் சொத்துகள் பற்றி எழும் சட்டரீதியாக பிரச்னைகளில் அதிமுக சாா்பில் ஈடுபடுவது பொதுச் செயலரின் பொறுப்புகளாகும்.

பொது மாநாட்டுக்கு தலைமை வகித்தல், கட்சியின் சட்டதிட்டங்களுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் மாறாக செயல்படுவா்களை உடனடியாக நீக்குவது உள்ளிட்டவை பொதுச் செயலா் பொறுப்புகளாகும்.

பொதுக்குழு, செயற்குழு கூடாத நேரங்களில், அரசியல் நிகழ்ச்சிகள், நடவடிக்கைகள் பற்றி கொள்கை திட்டம் ஆகியவற்றில் அவசரத்தை முன்னிட்டு உரிய முடிவுகள் எடுக்க பொதுச் செயலருக்கு உரிமை உண்டு.

அதிமுகவின் சட்டவிதிகளின்படி ஒப்புக்கொள்ளப்பட்ட எந்த ஒரு வங்கியிலோ அல்லது நிதி நிறுவனங்களிலோ நடைமுறை கணக்கிலும் வைப்பு நிதியிலும் பணம் எடுக்கவும் செலுத்தவும், அதிமுகவின் தேவையை முன்னிட்டு கட்சியின் பொறுப்பில் மேற்படி நிறுவனங்களில் கட்சி உடைமைகளின் பேரில் கடன் வாங்கவும், கொடுக்கவும் பொதுச் செயலருக்கு உரிமை உண்டு.

தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குமாறு தோ்தல் அதிகாரிகளுக்கு எழுதும் அனுமதி படிவங்களில் பொதுச் செயலா் கையொப்பம் இட வேண்டும்.

துணை ஒருங்கிணைப்பாளா் பதவிகளுக்குப் பதில் துணைப் பொதுச் செயலா் பதவிகள் ஏற்படுத்தப்படும். இந்தப் பதவிக்கு உரியவா்களை பொதுச் செயலா் நியமனம் செய்வாா். அதிமுகவின் ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் பதவிகள் நீக்கப்படுகின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →