தமிழ்நாடு

தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு மறுக்கப்படுவது சமூக அநீதி: அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 13,331 தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு மறுக்கப்படுவது சமூக அநீதி என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டினார்.

DIN


தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 13,331 தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு மறுக்கப்படுவது சமூக அநீதி என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டினார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 13,331 தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளில் பள்ளிக் கல்வித் துறை தீவிரமாக ஈடுபட்டிருக்கும் நிலையில், அதில் இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தற்காலிக ஆசிரியர்களாக இப்போது நியமிக்கப்படுபவர்கள், எதிர்காலத்தில் பணி நிலைப்பு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கும் நிலையில், அப்போது இடஒதுக்கீடு புறக்கணிக்கப்படும் என்பதால் இது போக்க முடியாத சமூக அநீதியாக அமைந்து விடக்கூடும்.

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுகளை நடத்தி, நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வரை மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்காக 4,989 இடைநிலை ஆசிரியர்கள், 5,154 பட்டதாரி ஆசிரியர்கள், 3,188 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 13,331 ஆசிரியர்களை மிகக் குறைந்த ஊதியத்தில் தற்காலிகமாக நியமிக்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

இதற்காக ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற 28,984 பேர் உள்பட மொத்தம் ஒரு லட்சத்து 50,648 பேர் விண்ணப்பித்திருக்கின்றனர். தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மை அமர்விலும், மதுரை அமர்விலும் தொடரப்பட்டுள்ள இரு வழக்குகள் காரணமாக தற்காலிக ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறை தடைபட்டிருக்கிறது.

உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்தால், எந்த நிமிடமும் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடங்கி உடனடியாக முடிக்கப்படும். ஆனால், 13,331 ஆசிரியர்களை நியமிப்பதில் இடஒதுக்கீட்டை கடைபிடிப்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை. பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்களில் இதுபற்றி கேட்டபோது, தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் பள்ளிகள் அளவில், பள்ளி மேலாண்மை குழுவால் மேற்கொள்ளப்படவிருப்பதால், அதில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை என்று விளக்கம் கிடைத்திருக்கிறது.

இந்த விளக்கத்தை ஏற்கவே முடியாது. நியமன நடைமுறைகளை காரணம் காட்டி இடஒதுக்கீட்டை செயல்படுத்த முடியாது என்று பள்ளிக் கல்வித் துறையே கூறுவது தமிழ்நாட்டில் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் சமூக நீதிக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும்.

இந்த சமூக அநீதியை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம் செய்திருப்பவர்களில் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தகுதிப் பட்டியல் தயாரித்து, மாநில அளவில் கலந்தாய்வு நடத்தி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலமாக மட்டும்தான் அரசு பள்ளிகளில் தகுதியான ஆசிரியர்களை நியமிக்கவும், சமூக நீதியை பாதுகாக்கவும் முடியும் என்பதை தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை உணர வேண்டும் என்று அந்த அறிக்கையில் அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT