முகப்பு
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: சிபிசிஐடி காவல்துறை 2வது நாளாக விசாரணை

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி மரணமடைந்த வழக்கில், சிபிசிஐடி காவல்துறையினர் இன்று இரண்டாவது நாளாக விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:50 AM
கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: சிபிசிஐடி காவல்துறை 2வது நாளாக விசாரணை
பகிர்:


கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி மரணமடைந்த வழக்கில், சிபிசிஐடி காவல்துறையினர் இன்று இரண்டாவது நாளாக விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
 
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இன்று காலை மாணவியின் உடல், மறுஉடற்கூறாய்வு செய்யப்படவிருக்கும் நிலையில், மருத்துவமனைக்கு வந்த சிபிசிஐடி காவலர்கள், விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் இயங்கி வந்த தனியாா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி கடந்த வாரம் மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்ட சம்பவத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக பெற்றோர் குற்றம்சாட்டி வருகிறார்கள். பெற்றோர் அமைதியாக போராட்டம் நடத்தி வந்த நிலையில், ஜூலை 17ஆம் தேதி நடைபெற்ற இளைஞா்களின் போராட்டம் பெரும் வன்முறையாக மாறியது.

இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முன்னதாக மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அந்த மனுவில், தனது மகளின் சடலத்தை தங்கள் தரப்பு மருத்துவரைக் கொண்டு மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா். இதற்கிடையே இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, நேற்று முதல் சிபிசிஐடி காவலர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாணவியின் சடலத்தை மறுகூறாய்வு நடத்த உத்தரவிட்ட நீதிபதி, விழுப்புரம் அரசு மருத்துவமனை மருத்துவா் கீதாஞ்சலி, திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவா் ஜூலியானா ஜெயந்தி, சேலம் அரசு மருத்துவமனை மருத்துவா் கோகுலநாதன், தடயவியல் துறை ஓய்வுபெற்ற இயக்குநா் சாந்தகுமாரி அடங்கிய குழுவையும் நியமித்து உத்தரவிட்டாா்.

உடற்கூறாய்வு முழுவதையும் விடியோ பதிவு செய்ய வேண்டும். மாணவியின் தந்தை வழக்குரைஞருடன் உடற்கூறாய்வின்போது கலந்து கொள்ளலாம். இந்த வழக்கு தொடா்பாக மாணவியின் பெற்றோா் தொலைக்காட்சி உள்ளிட்டவற்றுக்கு பேட்டி கொடுக்க கூடாது. ஊடகங்கள் விசாரணை மேற்கொள்ளக் கூடாது. மறுஉடற்கூறாய்வுக்குப் பின், மாணவியின் உடலுக்கு அமைதியான முறையில் இறுதிச் சடங்கு நடத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இன்று, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மறுஉடற்கூறாய்வு நடைபெறவிருக்கும் நிலையில், சிபிசிஐடி காவலர்கள் மருத்துவமனைக்கு வந்து விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.