தமிழ்நாடு

விவசாயிகள் பெயரில் ரூ.40 கோடி கடன் வாங்கி சர்க்கரை ஆலை மோசடி: ஆட்சியரகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

DIN

கடலூர்: விவசாயிகள் பெயரில் ரூ.40 கோடி கடன் வாங்கி சர்க்கரை ஆலை நிர்வாகம் மோசடி செய்துள்ளதை அடுத்து   விவசாயிகள் பெயரில் வாங்கப்பட்ட வங்கி கடனை நிறுவனம் முழுமையாக ஏற்க வேண்டும் என வலியுறுத்தி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.  

கடலூர் மாவட்டம், எ.சித்தூரில் திரு  ஆரூரான் சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலை திவாலானதாக அறிவிக்கப்பட்டது. இந்த ஆலையை மற்றொரு நிறுவனம் வாங்கிய நிலையில் விவசாயிகள் பெயரில் வங்கியில் பெறப்பட்ட கடன் ரூ.40 கோடியை ஏற்க மறுத்து விட்டதாம். இதனால், விவசாயிகள் பெயரில் கடன் இருப்பதாகவும், அவர்களுக்கு வேறு வங்கியில் கடன் வழங்க மறுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. 

மேலும், விவசாயிகள் நகைக்கடனுக்காக வைத்த நகைகள் ஏலம் விடப்பட்டு கடனுக்கு ஈடு செய்யப்படுகிறதாம். அதாவது, விவசாயிகள் பெயரை பயன்படுத்தி சர்க்கரை ஆலை நிர்வாகம் வாங்கிய கடனுக்கு தற்போது விவசாயிகள் கடனை திரும்ப செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாம். எனவே, இந்த கடனை சர்க்கரை ஆலையை வாங்கிய நிறுவனம் ஏற்க வேண்டும். 

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்ட 2.80 லட்சம் டன் கரும்புக்கு டன்னுக்கு ரூ.2,700 வீதம் ரூ.115 கோடி பாக்கி உள்ளதாம். ஆனால், டன்னுக்கு ரூ.300 மட்டுமே தருவதாக கூறுகிறார்களாம். எனவே, விவசாயிகள் பெயரில் வாங்கப்பட்ட வங்கி கடனை நிறுவனம் முழுமையாக ஏற்க வேண்டும். கரும்பு நிலுவை ரூ.115 கோடியை வட்டியுடன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் பி.அய்யாக்கண்ணு தலைமையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 

அவர்களிடம் கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, காவல்துறை துணை கண்காணிப்பாளர் சே.கரிகால் பாரி சங்கர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விவசாயிகளை, ஆட்சியரை பார்க்க அனுமதிக்க மறுத்ததால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின், அய்யாக்கண்ணு உள்ளிட்ட 3 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் ஆட்சியர் கி.பாலசுப்ரமணியனை சந்தித்து மனு அளித்தனர்.

பின்னர் பி.அய்யாக்கண்ணு கூறுகையில், விவசாயிகள் பெயரிலான கடனை நிறுவனம் ஏற்க வேண்டும். கரும்பு நிலுவையை முழுமையாக வழங்க வேண்டும். மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கி வந்த ரூ.6 ஆயிரம் கௌரவ தொகை தற்போது அனைவருக்கும் கிடைப்பதில்லை. 

விவசாயிகள் கோரிக்கை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

மாநில செயலாளர் ஜி.சக்திவேல், மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT