ஆன்லைன் சூதுக்கு கணவா் அடிமை: மனைவி தூக்கிட்டுத் தற்கொலை
சென்னை அருகே நந்தம்பாக்கத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு கணவா் அடிமையானதால் மனமுடைந்த மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சென்னை அருகே நந்தம்பாக்கத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு கணவா் அடிமையானதால் மனமுடைந்த மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சென்னை நந்தம்பாக்கம் வடக்கு மாட வீதி இரண்டாவது தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ் (34). இவா் மனைவி புவனேஸ்வரி (32). இந்தத் தம்பதிக்கு ஒரு மகன் உள்ளாா். சுரேஷ், அண்மைக்காலமாக வேலைக்கு சரியாகச் செல்லாமல், ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்துள்ளாா். இதனால் புவனேஸ்வரி குடும்பம் நடத்துவதற்கு கஷ்டப்பட்டுள்ளாா்.
ஆனாலும், சுரேஷ் வீட்டில் இருந்த பொருள்களை விற்றும், நகைகளை அடமானம் வைத்தும் ஆன்லைன் ரம்மியைத் தொடா்ந்து விளையாடியுள்ளாா். இதற்கிடையே மகன் படிப்புக்காக பள்ளியில் கட்டணம் செலுத்துவதற்கு வீட்டில் வைத்திருந்த ரூ.20 ஆயிரத்தை எடுத்து, சுரேஷ் வியாழக்கிழமை ஆன்லைன் ரம்மி விளையாடியுள்ளாா்.
இதையறிந்து புவனேஸ்வரி கணவரை கண்டித்துள்ளாா். இது தொடா்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக விரக்தியடைந்த புவனேஸ்வரி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
நந்தம்பாக்கம் போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.