கும்பகோணம் அருகே ஆணவக் கொலை; புதுமணத் தம்பதிகளை வெட்டிக் கொடூரம்
கும்பகோணம் அருகே சோழபுரத்தில், புதுமணத் தம்பதி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம் ஆன ஐந்து நாட்களே ஆன புதுமண தம்பதி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். விருந்திற்கு வந்த தம்பதிகள் தண்ணீர் அருந்தும் போது குடும்பத்தினரால் நடத்தப்பட்ட ஆணவக் கொலையால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே துளுக்கவெளி பகுதியைச் சேர்ந்த சரண்யா (24), திருவண்ணாமலையை மாவட்டத்தைச் சேர்ந்த மோகன் (31) என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.
சரண்யாவின் காதல் அவரது வீட்டுக்கு தெரிய வந்ததால், அவரது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சரண்யாவின் சகோதரரான சக்திவேல் தனது மைத்துனர் ரஞ்சித் என்பவருக்கு சரண்யாவை திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்துள்ளார்.
Advertisement
இதனை அறிந்த சரண்யா, கடந்த 5 நாள்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி, மோகனுடன் திருமணம் செய்துகொண்டு சென்னையில் இருந்துள்ளார்.
இந்நிலையில் புதுமணத் தம்பதிகளை விருந்துக்கு அழைப்பதாக கூறி அவரது சகோதரர் சக்திவேல் வீட்டிற்கு வரவழைத்துள்ளார். இதனை நம்பி சரண்யா மற்றும் மோகன் இருவரும் வீட்டிற்கு வந்துள்ளனர்.
அப்போது புதுமணத் தம்பதிகள் வீட்டிற்குள் நுழைவதற்கு முன் இருவரும் தண்ணீர் கொடுத்துள்ளனர். தண்ணீரை வாங்கி தம்பதிகள் குடித்த போது அவரது சகோதரர் சக்திவேல் மற்றும் மைத்துனர் ரஞ்சித் ஆகிய இருவரும் புதுமணத் தம்பதிகளை வெட்டி உள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இக்கொலை சம்பவம் குறித்து சோழபுரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு உடற்கூறு ஆய்விற்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர்.
மேலும், கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பெண்ணின் சகோதரர் சக்திவேல் மற்றும் மைத்துனர் ரஞ்சித் இருவரும் கும்பகோணம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.