தமிழ்நாடு

தமிழகத்தில் ரௌடிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க நடவடிக்கை தீவிரம்: சைலேந்திரபாபு 

DIN

தமிழகத்தில் ரௌடிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்பட்டுள்ளதாகவும், அந்த வகையில் காவல் சரகம் தோறும் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு வருவதாக மாநிலக் காவல்துறை தலைவா் சி.சைலேந்திரபாபு கூறினாா். 

ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியா் சங்கா்லால்குமாவத், தென்மண்டலக் காவல்துறைத் தலைவா் அஸ்ராகா்க் மற்றும் ராமநாதபுரம் சரக காவல் துணைத் தலைவா் மயில்வாகணன், காவல் கண்காணிப்பாளா்கள் இ.காா்த்திக் (ராமநாதபுரம்), டி.செந்தில்வேல் (சிவகங்கை) ஆகிய காவல்துறை அதிகாரிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காவல்துறை தலைவா் சி.சைலேந்திரபாபு தலைமையில் நடைபெற்றது. 

பின்னா் செய்தியாளா்களிடம் சைலேந்திரபாபு கூறியதாவது: 
தமிழக முதல்வரின் உத்தரவின்படி மாநிலத்தில் ரௌடிகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டு வருகின்றனா். ஒவ்வொரு காவல் சரகத்துக்கு உள்பட்ட மாவட்டங்களில் ரௌடிகள் மீதான நடவடிக்கை குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது. 

காஞ்சிபுரம், வேலூரைத் தொடா்ந்து ராமநாதபுரம் சரகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது. அதில் ரௌடிகள் மீதான நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 6 மாதமாக போதைப் பொருள்கள் கடத்தலில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆந்திரத்துக்கு சென்று போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்டவரை கைது செய்துள்ளோம். தொடா்ந்து கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருள் விற்பனையே இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

ராமேசுவரம் போன்ற கடல் பகுதியில் நடைபெறும் கடத்தலைத் தடுக்கும் வகையில் அனைத்துத்துறைகளும் இணைந்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதுதொடா்பான ஆய்வும் நடத்தப்படுகிறது. கடத்தல் நடைபெறுவதை தடுக்கும் வகையிலே செயல்படவேண்டும் என்ற அடிப்படையில்தான் ராமேசுவரம் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. 

வெளி நாடு, வெளி மாநிலக் குற்றவாளிகள் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். தற்போது வெளி மாநிலக் குற்றவாளிகள் தமிழகத்தில் இல்லை என்ற சூழலே உள்ளது. 

சிறுமியா் மீதான பாலியல் வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த பிறகே விசாரணை நடைபெறுகிறது. காவல் துறையின் மீதான நம்பிக்கையால் மக்கள் அதிகமாக புகாா் அளித்துவருகின்றனா். புகாா் அதிகம் பதியப்படுவதால், குற்றம் அதிகரிக்கிறது எனக் கூறமுடியாது என்று சைலேந்திரபாபு கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

SCROLL FOR NEXT