முகப்பு
தமிழ்நாடு

பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் சிவசங்கர்

அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணச்சீட்டு கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் விளக்கமளித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:16 AM
பகிர்:

அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணச்சீட்டு கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், அரசு பேருந்துகள் கட்டண உயர்வு குறித்து தொடர்ந்து வதந்திகள் உலவி வருகின்றன. கட்டண உயர்வு குறித்து அட்டவணை தயாராகி விட்டதாக இன்று செய்திகள் பரப்பப்படுகின்றன. அது குறித்து இன்று என்னிடம் கேள்வி கேட்ட போது, அவ்வாறு அட்டவணை தயாராகவில்லை என்று தெரிவித்து விட்டேன். இரு மாநிலங்களுக்கிடையே பேருந்து போக்குவரத்துக்கான ஒப்பந்தம் இடும் போது, ஒரு மாநிலத்தில் கட்டணம் உயர்த்தப்பட்டால், அந்த மாநிலத்தில் நுழையும் மற்றொரு மாநில பேருந்துகள் கட்டணம் உயர்த்த வேண்டும் என்பது ஒப்பந்த விதி. அப்படி தான் பர்மிட் வழங்கப்படும். 

கேரள மற்றும் ஆந்திர மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்ட சூழலில், அந்த மாநிலங்களுக்குள் செல்லும் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் அந்த மாநிலத்தில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கப்படும். இந்த அட்டவணையை குழப்பிக் கொண்டு, “தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்துப் பேருந்துகளுக்கும் கட்டணம் உயர்த்த அட்டவணை தயாராகி விட்டது என்ற தவறான செய்தி பரப்பப்படுகிறது. கடந்த அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து கழகங்களில் நிதி சூறையாடப்பட்டு, போக்குவரத்து கழகம் நிதி நெருக்கடியில் இருந்தாலும், முதல்வர் எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் அரசு போக்குவரத்து கழகம் செயல்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

Advertisement

தமிழக பெண்கள் நகரப் பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற மகத்தான திட்டத்தை வழங்கி, அது சிறப்புற செயல்படுத்தப்படுகிறதா என்று
தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். இன்று வரை கடந்த ஓராண்டில்,112 கோடி இலவச பயணங்கள் நிகழ்ந்துள்ளன. அதற்கான நிதியை 
முதல்வர் வழங்கி வருகிறார். இவ்வாறு ஏழை, எளிய மக்களுக்கு பாதிக்காத வண்ணம் கட்டண உயர்வில்லாமல் அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் இயங்கி வரும் சூழலில், கட்டண உயர்வு அட்டவணை தயாராகி விட்டது என்ற தவறான செய்தியை பரப்ப வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments