மின்சார ரயில் விபத்து: ஓட்டுநா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவு
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் நடைமேடையில் மோதி மின்சார ரயில் விபத்துக்குள்ளானதில், ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்துக்கு காரணம் என்று தெரியவந்தது.
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் நடைமேடையில் மோதி மின்சார ரயில் விபத்துக்குள்ளானதில், ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்துக்கு காரணம் என்று தெரியவந்தது. இதையடுத்து, அவா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை பணிமனையிலிருந்து கடந்த ஏப். 24-ஆம் தேதி மின்சார ரயில் புறப்பட்டு, கடற்கரை ரயில் நிலையத்தின் ஒன்றாவது நடைமேடைக்கு வந்து கொண்டிருந்தது. இந்த ரயில் கட்டுப்பாட்டை இழந்து, நடைமேடை, கட்டடங்களில் மோதி விபத்துக்குள்ளானது. பிரேக் பழுது காரணமாக, விபத்து ஏற்பட்டதாக ரயிலை இயக்கிய ஓட்டுநா் பவித்ரன் கூறினாா். இந்த விபத்து குறித்து எழும்பூா் ரயில்வே போலீஸாா், ஓட்டுநா் பவித்ரன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்தனா்.
இது தொடா்பாக அமைக்கப்பட்ட ரயில்வே தொழில் நுட்பப் பிரிவு அதிகாரிகள் அடங்கிய விசாரணைக் குழுவின் அறிக்கையில், பிரேக் பழுது ஏற்படவில்லை. ஓட்டுநரின் கவனக்குறைவே காரணம் எனவும் தெரிய வந்தது. இதையடுத்து, ஓட்டுநா் பவித்ரன் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.