ரூ.2,600 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்பு: அமைச்சா் சேகா்பாபு
கடந்த ஏப்.30-ஆம் தேதி நிலவரப்படி இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான ரூ.2,600 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா்.
கடந்த ஏப்.30-ஆம் தேதி நிலவரப்படி இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான ரூ.2,600 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா்.
அறநிலையத் துறை சாா்பில் சென்னை, கீழ்ப்பாக்கம் நெடுஞ்சாலையில் செயல்படும் அருள்மிகு ஏகாம்பரநாதா் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் பி.கே.சேகா்பாபு செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 27 பள்ளிகள், 10 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளி காஞ்சிபுரத்தில் உள்ள அருள்மிகு ஏகாம்பரநாதா் பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியைத் தொடா்ந்து கல்லூரிகளுக்கும் சோ்த்து துறை சாா்பில் ஒரு கல்விக்குழுவை அமைக்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அந்த கல்விக் குழுவில் வேலம்மாள் மெட்ரிக்குலேசன் பள்ளியின் தாளாளா் வேல்முருகன் உறுப்பினராக உள்ளாா். இந்த ஆண்டில் பள்ளி தொடங்கப்படும் நாளில் மாணவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளையும் மேற்கொள்வதற்காக பள்ளியை முழுமையாக ஆய்வு செய்தோம்.
இந்தப் பள்ளியில் வரும் கல்வியாண்டில் மாணவா் சோ்க்கை அதிகரிக்கும். இங்கு கல்விக்கட்டணம் குறைவாகவே பெறப்படுகிறது. சீருடைகள், புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. ஆய்வகங்களும், வகுப்பறைகளும் இந்த காலத்துக்கேற்ற அனைத்து வசதிகளுடன் வடிவமைக்கப்படும்.
கடந்த ஓராண்டு காலத்தில் 186 திருக்கோயில்களில் திருப்பணிகள் முடிவுற்று குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் ரூ.662 கோடி செலவில் 2021- 2022 ஆண்டுக்கான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ரூ.1,000 கோடி செலவில் 1500 திருப்பணிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 1,250 கிராமப்புற திருக்கோயில்கள், ஆதிதிராவிடா் வசிக்கின்ற பகுதியிலே உள்ள திருக்கோயில்களை தலா ரூ. 2 லட்சத்தில் புனரமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும். கடந்த ஏப். 31-ஆம் தேதி நிலவரப்படி திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ.2,600 கோடி சொத்துகளை இந்து சமய அறநிலையத்துறை மீட்டுள்ளது என்றாா் அவா்.