அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு
தமிழ்நாட்டில் பரவலாக கனமழை பெய்துவருவதால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாட்டில் பரவலாக கனமழை பெய்துவருவதால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (2.11.2022) சென்னை, எழிலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று அதன் செயல்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் பொதுமக்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கள நிலவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை 29.10.2022 அன்று தொடங்கியதிலிருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் பேரிடர்களை திறம்பட எதிர்கொள்ள தமிழக முதல்வர் தலைமையில் 26-09-2022 அன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில், அரசு துறைச் செயலாளர்கள் மற்றும் துறை தலைவர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டன.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிக்கையின்படி, தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், முதல்வர் ஸ்டாலின் நேற்று (1-11-2022), மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆய்வு செய்து உரிய அறிவுரைகளை வழங்கினார்.
கடந்த இரு தினங்களாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை, எழிலகத்திலுள்ள மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, மாநிலத்தில் பெய்துவரும் மழை, வெள்ளம் குறித்த விவரங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் தகவல்கள் குறித்து கேட்டறிந்தார். மாவட்ட ஆட்சியர்களுக்கும், பொதுமக்களுக்கும் அனுப்ப வேண்டிய முன்னெச்சரிக்கை செய்திகளை உடனடியாக அனுப்பவும், 1070 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாக வரப்பெறும் புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுரை வழங்கினார்.
இதையும் படிக்க | வசூல்ராஜா எம்பிபிஎஸ் போல ரெடியான மோர்பி மருத்துவமனை: விடியோ வெளியிட்ட பிரசாந்த் பூஷண்
மேலும், திருவள்ளூர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர்கள், ஆவடி மற்றும் தாம்பரம் மாநகராட்சி ஆணையர்கள் ஆகியோரை தொடர்பு கொண்டு கள நிலவரத்தை கேட்டறிந்து, நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்த உத்தரவிட்டதுடன், மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்ட பொதுமக்களிடமும் தொலைபேசி மூலம் உரையாடி அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்து, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும், வெள்ளப் பாதிப்பு குறித்த புகார் தெரிவிக்கப்பட்டவுடன் அரசு துரிதமாக செயல்பட்டு பாதிப்புகளுக்கு தீர்வு கண்டு வருவதற்கு தமிழக முதல்வருக்கு பொதுமக்கள் தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.