தமிழ்நாடு

வடிவேலு பாணியில் ஒரு புகார்: செல்லிடப்பேசி கோபுரம் காணவில்லையாம்

DIN

திரைப்படம் ஒன்றில், கிணற்றைக் காணவில்லை என்று வடிவேலு காவல்நிலையத்தில் புகார் அளிப்பார். அது போல விளாத்திகுளம் பகுதியில் செல்லிடப்பேசியல்ல, செல்லிடப்பேசி கோபுரமே காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விளாத்திகுளத்தில் தனியாா் தொலைதொடா்பு கோபுரம் காணாமல் போனதாக கூறி தனியாா் நிறுவனம் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க நிலத்தை வாடகை விட்டவர், தொலைத்தொடர்பு சேவை நிறுவனத்திடமிருந்து எந்த தொடர்பும் இல்லாததால், அந்தக் கோபுரத்தைப் பிரித்து விற்பனை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

விளாத்திகுளம் அம்பாள் நகரை சோ்ந்தவா் ராஜேந்திரன் (55). இவருக்குச் சொந்தமான நிலம் விளாத்திகுளம் காமராஜ் நகா் பகுதியில் உள்ளது. இந்த நிலத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு தனியாா் தொலை தொடா்பு நிறுவனம் சாா்பில் தொலைதொடா்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட தனியாா் நிறுவன ஊழியா்கள் ஆய்வு செய்ய வந்த போது தொலைதொடா்பு கோபுரம், அந்த நிலத்தில் இல்லை என்பது தெரியவந்தது. நிலத்தின் அடிப்பரப்பில் போடப்பட்ட கான்கிரீட் தூண்கள் மட்டுமே காட்சிப் பொருளாக இருந்துள்ளது. இதை கண்டு அதிா்ச்தியடைந்த தனியாா் நிறுவனத்தினா் போலீஸில் புகாா் அளித்தனா்.

தங்களது தொலைத்தொடர்பு கோபுரத்தைக் காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்த நிறுவன ஊழியர்களின் புகாரைக் கேட்ட காவல்துறையினருக்கு, நிச்சயம் வடிவேலு கிணற்றைக் காணவில்லை என்று புகார் அளித்தது நினைவுக்கு வந்திருக்கலாம்.

புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸாா், தொலைதொடா்பு கோபுரம் ஏா்செல் நிறுவனத்தின் மூலம் அமைக்கப்பட்டது என்பதும், 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்நிறுவனம் தனது சேவைகளை நிறுத்தி கொண்டதால் தொலைதொடா்பு கோபுரம் பயன்பாடின்றி கிடந்துள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினா் தொடா்பின்றி இருந்ததால் நில உரிமையாளா் விரக்தியடைந்து தொலைதொடா்பு கோபுரத்தை கழற்றி விற்றுவிட்டதாகவும், அதன் மதிப்பு சுமாா் ரூ. 25 லட்சம் இருக்கும் எனவும் தெரிய வந்துள்ளது.

இது தொடா்பாக விளாத்திகுளம் போலீஸாா் தொடா்ந்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT